Dengue: டெங்குவால் நிகழும் உயிரிழப்புகள் குறைந்திருக்கிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வதென்ன?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணிகளைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (அக்டோபர் 23) ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு, மருத்துவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொது மருத்துவ பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்குச் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் புதிய கட்டிட பணிகளைப் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், "அருப்புக்கோட்டையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல ராஜபாளையத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடம் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் கட்டடத்தின் பணிகள் முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் அதே நேரத்தில் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, காலரா போன்ற நோய்ப் பாதிப்பும் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும்.
டெங்குவை பொருத்தவரை கடந்த 2012 மற்றும் 2017ம் ஆண்டுகளில்தான் வீரியம் அதிகமாக இருந்தது. 2012ல் 66 பேரும், 2017ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். முதல்வரின் வழிகாட்டுதலோடு பல்வேறு சேவைத் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுக் கடந்த மூன்று ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு மிகப்பெரிய கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10-க்கும் குறைவானவர்களே டெங்குவால் உயிர் இழந்துள்ளனர்.
இவர்களும் மருத்துவமனைக்கு வராமல் வீடுகளிலேயே சிகிச்சை பெறுவது, மருத்துவர்களை அணுகாமல் சரி செய்ய முயல்வது போன்ற காரணங்களாலும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதனாலும் டெங்கு பாதிப்பு வருகிறபோது உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு மழை தொடங்கும் நேரம் வந்துவிட்ட நிலையிலும் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை. அரசு மருத்துவமனை என்றாலே மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் என்று முடிவு செய்வது தவறு. தேவையான அளவிலிருந்து சுமார் பத்து சதவீதம் மட்டுமே மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்த 10 சதவீத காலி இடமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து வகையான மருத்துவங்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் சித்தா உள்ளிட்ட பிரிவுகளுக்குத் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு பிசியோதெரபி மூலம் வைத்தியம் செய்யப்படுகிறது. வீடுகளுக்குத் தேடிச் சென்று பிசியோதெரபி வைத்தியம் பார்க்கப்படுகிறது. ஐந்து வகையிலான மருத்துவங்களில் சுமார் 2 கோடி பேர் தமிழகத்தில் பயனடைந்துள்ளனர்." என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY