Rain Alert: `புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி..!’ - பாலச்சந்திரன் சொ...
Digital Arrest: ``கழிவறையிலும் வீடியோ கால்.." - அத்துமீறி பணம் பறித்த மோசடி கும்பல்!
Digital Arrest: 8 நாள்களாக வீட்டில் சிறை..
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த படியே வேலை செய்து வந்துள்ளார். கடந்த வாரம் அவரை தொடர்பு கொண்ட சிலர் வெளிநாட்டு கூரியர் நிறுவனம் மற்றும் டெல்லி சைபர் கிரைம் போலீஸார் என்ற பெயரில் பேசியுள்ளனர். அந்த பெண்ணின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பார்சலில் போதைப்பொருள் கடத்தப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மிரட்டி ஸ்கைப் காணொளி மூலம் 8 நாள்களாக வீட்டின் தனியறையில் சிறை வைத்துள்ளனர்.
முறையான உணவு, தூக்கமின்றி தவித்த இளம்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துதுள்ளனர். டிஜிட்டல் சிறை என்ற நூதன மோசடியால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான பாதிப்பில் தவித்து வருகிறார்.
இந்நிலையில், நீலகிரியில் தனியாக வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள், "உங்களின் வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் டெல்லியில் நடந்திருப்பதால் உங்களை டிஜிட்டல் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடியும் வரை வீடியோ இணைப்பில் இருக்க வேண்டும்" என மிரட்டியுள்ளனர் .
ஒரு நாள் முழுவதும் அவரை சிறை பிடித்து வைத்திருந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து பறித்ததுடன், கழிவறைக்கு செல்லும்போதும் வீடியோ இணைப்பில் இருக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து அத்துமீறியுள்ளனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் அத்துமீறல்
இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிவித்த சைபர் கிரைம் போலீஸார், " நீலகிரியில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருடைய மகள்களுக்கு திருமணமான நிலையில் , வெளிநாட்டில் பணியில் உள்ளனர்.
அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்களது பெயரை பயன்படுத்தி டில்லியில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்துள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம் என்றும், அதுவரை வீடியோ காலில் இணைப்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதனை நம்பிய அந்த ஆசிரியை, தன் நிரந்தர வைப்புத் தொகையில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தையும் அவர்களிடம் இழந்திருக்கிறார். டிஜிட்டல் சிறை என்ற பெயரில் அவரை ஒரு நாள் வீடியோ இணைப்பில் வைத்திருந்த நிலையில், ஆசிரியை கழிப்பறைக்கு செல்லும்போது கூட வீடியோ கால் இணைப்பில் தான் இருக்க வேண்டும் என்று மர்ம நபர்கள் நிர்பந்தித்து அத்துமீறியுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.