தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
Doctor Vikatan: என் மகனுக்கு 22 வயதாகிறது. அவனுக்கு பைக் ஓட்டுவதில் அலாதி ஆர்வம். ஃபேன்சி பைக் வைத்திருக்கிறான். வார இறுதி நாள்களில் நண்பர்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பைக் ரைடு செல்கிறான். அப்படிச் செல்வது முதுகெலும்பை பாதிக்கும் என எச்சரித்தால் அப்படியெல்லாம் ஆகாது என்கிறான். இப்படி ஃபேன்சி பைக் ஓட்டுவதும், லாங் ரைடு போவதும் முதுகுப்பகுதியை பாதிக்காதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு.

பைக் ஓட்டும்போது எந்த பொசிஷனில், எப்படி உட்கார்ந்து ஓட்டுகிறீர்கள் என்பது முக்கியம். தவறான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்டினால், நிச்சயம் முதுகுவலியும், கழுத்துவலியும் வரும்.
நீண்ட நேரமும், நீண்ட தூரமும் பைக் ஓட்டுவதையும் அனைவரும் தவிர்க்க வேண்டும். கடினமான இருக்கையில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வாகனம் ஓட்டும்போது டெயில்போன் எனப்படுகிற எலும்பிலும் பிரச்னை வரலாம்.
சிறு வயதில் பலரும் ஏதோ வேகத்தில் ஃபேன்சி பைக்குகள் ஓட்டுகிறார்கள். அப்போது அவர்களுக்குப் பெரிதாக பிரச்னை வர வாய்ப்பிலலை. ஆனால், அதை நீண்ட நாள்களுக்குத் தொடரும்போது பிற்காலத்தில் நிச்சயம் பிரச்னை வரலாம். நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது, பைக் ஓட்டும்போது என ஒவ்வொன்றுக்கும் பின்பற்ற வேண்டிய முறை என இருக்கிறது. அதைச் சரியாக கவனத்தில் கொண்டாலே கழுத்துவலி, முதுகுவலி வராது. பிசியோதெரபிஸ்ட்டை அணுகினால் அவர்கள் அது குறித்துக் கற்றுத் தருவார்கள்.

பைக் ஓட்டும்போது முதுகுவலியோ, கழுத்துவலியோ வந்தால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் பைக் ஓட்டும் தோரணை சரியாக உள்ளதா என்பதை செக் செய்ய வேண்டும். பெரும்பாலும் அதில் தவறு ஏற்படும்போதுதான் இதுபோன்ற வலிகள் வரும். உங்கள் பைக்கில் ஷாக் அப்சார்பர் சரியாக உள்ளதா என்று செக் செய்ய வேண்டும். உங்கள் முதுகுப்பகுதியில் உள்ள எலும்புகள் பாதிக்கப்படாமலிருக்க, வாகனத்தின் ஷாக் அப்சார்பர் சரியாக இருக்க வேண்டும். நீங்கள் வாகனம் ஓட்டும் பொசிஷனும் சரியாக இருக்க வேண்டும். நீண்டதூரம் பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், அது முதுகு மற்றும் கழுத்து எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இள வயதில் பிரச்னை தராவிட்டாலும், பிற்காலத்தில் பிரச்னை வரலாம் என்பதால், தினமும் குறிப்பிட்ட நேரம் மற்றும் துரம் மட்டுமே பைக் ஓட்ட வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.