Samosa and Jalebi: இனிமே சமோசாவும் ஜிலேபியும் சாப்பிடவே கூடாதா? - மருத்துவர் தரும் விளக்கம்
சாலையோரக் கடைகளில் நம் கண்ணெதிரே சுடச்சுட பொரித்து தரப்படும் சமோசாவும், ஜிலேபியும் பலருடைய ஆல் டைம் ஃபேவரிட் ஸ்நாக்ஸாக மாறி கிட்டத்தட்ட 20 வருடங்களாவது ஆகியிருக்கும். ஒரு கடி சமோசா, ஒரு கடி ஜிலேபி என சப்புக்கொட்டி ருசித்தவர்கள் எல்லாம் நேற்றைய தினத்தில் இருந்து பயந்துபோய் கிடக்கிறார்கள். காரணம் என்னத் தெரியுமா? .
சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பதுபோல, விரைவில் சமோசா, ஜிலேபி பாக்கெட்டுகளின் மேலும் எச்சரிக்கை வாசகம் இடம்பெறவிருக்கிறது என இந்திய இதயவியல் சங்கத்தின் தலைவர் அமர் அமலே பேசியிருப்பதுதான்.
இதன் பின்னணியை அறிய சென்னையைச் சேர்ந்த 'மூத்த இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர்' டாக்டர் பாசுமணி அவர்களிடம் பேசினோம்.

''இன்னும் 25 வருடங்கள்ல, அதாவது 2050-ல இந்தியாவுல சுமார் 50 கோடி பேர் உடல் பருமனா இருப்பாங்கன்னு கணிக்கப்பட்டிருக்கு. தவிர, சிட்டியில வசிக்கிறவங்கள்ல ஐந்தில் ஒருத்தர் உடல் பருமனால அவதிப்பட்டுக்கிட்டிருக்கார். இதைவிட முக்கியமான விஷயம், ஜங்க்ஃபுட்ஸ், நோ எக்சர்சைஸ், ஒரே இடத்துல உட்கார்ந்து போன் பார்க்கிறதுன்னு சிறுபிள்ளைகளும் உடல்பருமன் பிரச்னையால பாதிக்கப்பட்டிருக்காங்க.
இதனாலதான், உடல் பருமனை ஏற்படுத்துற அதிக மாவுச்சத்து மற்றும் அதிக எண்ணெய் கொண்ட உணவுப்பொருள்களைத் தவிர்க்கணும்னு மத்திய அரசு வலியுறுத்திக்கிட்டே இருக்கு. அதோட ஒரு பகுதியாதான் வட இந்தியாவுல ரொம்ப ஃபேமஸா இருக்கிற சமோசா, ஜிலேபி இரண்டுலேயும் அதிகமான மாவுச்சத்து, கொழுப்பு, சர்க்கரை இருக்கு. அவை உடல் பருமன்ல ஆரம்பிச்சு பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்னு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை செஞ்சிருக்கு'' என்றவர், சமோசா, ஜிலேபி குறித்து பேச ஆரம்பித்தார்.
''சமோசா, ஜிலேபியில மட்டும்தானா மாவுச்சத்து, கெட்டக்கொழுப்பு, சர்க்கரை இருக்கு..? பிரெட், ஜெல், ஜாம், டோனட், வடை, பூரி, பாக்கெட் சிப்ஸ்னு நாம கிட்டத்தட்ட தினசரி சாப்பிடுற எல்லா உணவுகள்லேயும் இந்த மூணு கெடுதலும் இருக்கே... இந்தந்த உணவுகள்ல இவ்ளோ கெடுதல் இருக்குன்னு நாமதான் புரிஞ்சி நம்ம ஆரோக்கியத்தைக் காப்பாத்திக்கணும். உதாரணத்துக்கு, நம்ம வீடுகள்ல தினந்தோறும் பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் செய்ய மாட்டோம். வாரத்துக்கு ஒருமுறை செஞ்சாலே அதிகம். இதே எச்சரிக்கை உணர்வு சமோசா, ஜிலேபி சாப்பிடுறதுலேயும் நமக்கு இருக்கணும்.

உடல் பருமனால கஷ்டப்படுறவங்களுக்கு, என்ன சாப்பிடணும், என்ன சாப்பிடக்கூடாது, வாக்கிங் போங்க, உடற்பயிற்சி செய்யுங்கன்னு டாக்டர்ஸ் நாங்க ஆலோசனை சொன்னாலும், அவற்றை ஃபாலோ செய்யுறவங்களுக்கு மட்டும்தான் அதற்கான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். ஃபாலோ செய்யாதவங்களுக்கு கிடைக்காது.
இதே மனப்பான்மை சிகரெட் விஷயத்துக்கும் பொருந்தும். சிகரெட் பாக்கெட்ல எச்சரிக்கை வாசகம் இருந்தாலும், அந்தப்பழக்கத்தை எல்லாரும் விடவில்லையே... எத்தனை வருத்தமான விஷயம் இது'' என்றவர் தொடர்ந்தார்.
''நம்ம உடலுக்கு மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின், மினரல்ஸ் எல்லாமே தேவை. இதுக்கு தினமும் பேலன்ஸ் டயட் சாப்பிடுங்க. எப்பவாவது ஆசைக்கு சமோசா, ஜிலேபி, வடை, பூரி, கேசரின்னு சாப்பிடுங்க. நமக்குப் பிடிச்ச உணவை சாப்பிடுறப்போ சுரக்கிற மகிழ்ச்சி ஹார்மோன்கள் நமக்கு நல்லதுதான் செய்யும். ஆனா, அந்த மகிழ்ச்சி ஏற்படுத்துற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டா நீண்டகால உடல் ஆரோக்கியத்துக்கு என்னென்ன கெடுதல்கள் வரும்கிற விழிப்புணர்வோட இருங்க.
கடைசியா ஒருவிஷயம் சொல்ல விரும்புறேன். கடையில வாங்கி சாப்பிடுற எந்த உணவா இருந்தாலும், அதுல என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கு; அது நம்ம ஆரோக்கியத்துக்கு நல்லதுதானான்னு தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க. நம்ம ஆரோக்கியத்துக்கு நாமதான் காவல்'' என்று பேசி முடித்தார் டாக்டர் பாசுமணி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...