முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!
Doctor Vikatan: உடலில் நீர் கோப்பது ஏன்... உணவுப்பழக்கத்தின் மூலம் குறைக்க முடியுமா?
Doctor Vikatan: உடலில் நீர்கோத்தல் என்பது எதைக் குறிக்கிறது... எந்தக் காரணங்களால் இப்படி உடலில் நீர் கோத்துக்கொள்ளும்... எப்படி சரி செய்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
உடலில் நீர்கோத்துக்கொள்ள பல காரணங்கள் இருக்கலாம். இதயத்தின் பம்ப்பிங் திறன் குறையும்போது, இப்படி உடலில், குறிப்பாக கால்களில் நீர் கோத்துக்கொள்ளும்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் உடலில் நீர்கோக்கும் பிரச்னை இருக்கும். கால்களில் நரம்பு சுருட்டிக்கொள்ளும் வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் இதயத்தின் பம்ப்பிங் திறன் மந்தமாவதால், கால்களில் நீர்கோத்துக்கொண்டு வீங்க ஆரம்பிக்கும். அதே மாதிரி உடலில் புரதச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கும் நீர்கோத்துக்கொள்ளும் பிரச்னை இருக்கும்.
உடலில் நீர்கோத்துக்கொள்வதை உணவுப்பழக்கத்தின் மூலம் குறைக்க முடியும். அந்த வகையில் புரதச்சத்து போதுமான அளவு உடலில் சேர்கிறதா என்று பார்க்க வேண்டும். சிலருக்கு சிறுநீரக பிரச்னை காரணமாக, புரதச்சத்து உடலில் இருந்து வெளியேறிவிடும். அவர்களுக்கு அதிகபட்ச புரதம் உள்ள உணவுகளாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.
அசைவம் சாப்பிடுவோர் என்றால், மீன், மட்டன், மாட்டுக்கறி போன்றவற்றைச் சாப்பிடலாம். அதே நபருக்கு உடலில் கொழுப்புச்சத்தும் அதிகமிருக்கிறது என்ற நிலையிலோ, இதய நோயாளிகளாக இருந்தாலோ, கொழுப்புச்சத்தில்லாத புரதமாகப் பார்த்துக்கொடுக்க வேண்டும். கொழுப்பில்லாத கறி, முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைக் கொடுக்கலாம்.
சைவ உணவுக்காரர்களுக்கு சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, பால், பனீர், டோஃபு, தயிர் போன்றவற்றைக் கொடுக்கலாம். சிலருக்கு இந்த மாதிரியான புரத உணவுகளைக்கூட செரிக்க முடியாத நிலை இருக்கும். அப்போது அவர்களுக்கு எது எளிதில் செரிமானமாகுமோ அந்த மாதிரியான புரதச்சத்தைக் கொடுக்க வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உப்பு குறைவான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிராம் அளவு மட்டுமே உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். அரை உப்பு சேர்த்த உணவுப்பழக்கத்துக்குப் பழக வேண்டும். உதாரணத்துக்கு, இட்லி- சட்னி சாப்பிடும்போது, இட்லியில் உப்பு சேர்க்காமலும் சட்னியில் மட்டும் அளவாக உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். சிறுநீரகம் மற்றும் இதயத்தில் பிரச்னை உள்ளவர்கள், குடிக்கும் தண்ணீரின் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டாலே இந்தப் பிரச்னையிலிருந்து மீள முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.