Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு அதிகரிக்குமா...?
Doctor Vikatan: நட்ஸ் சாப்பிட்டால் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்குமா... பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிட வேண்டுமா, தோல் நீக்கி சாப்பிடுவது சரியா? இதய நலனைப் பாதுகாக்க எண்ணெய் பயன்பாட்டை அறவே தவிர்ப்பதுதான் சரியானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த இதயசிகிச்சை மருத்துவர் சொக்கலிங்கம்
கொலஸ்ட்ரால் என்பது விலங்குகள், மனிதர்கள் என எல்லோருக்கும் அவசியமானது. அந்த கொலஸ்ட்ராலை ரத்தத்தில் இருந்து பிரித்து எடுத்துவிட்டால் அடுத்த நொடி இதயம், மூளை என எல்லாம் செயலிழந்து, உடனே நாம் இறந்துவிடுவோம். எனவே, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும்வரை அது நமக்குப் பாதுகாப்பானதுதான். அதற்கு எண்ணெய் உள்ளிட்ட சில உணவுப்பொருள்கள் அவசியம்தான்.
முட்டையின் மஞ்சள் கருவில் 300 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. அதனால்தான் 20 வயதுக்குப் பிறகு மனிதர்கள் மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. எந்த எண்ணெயை வெளியில் வைத்தால் உறைகிறதோ அதில் கொழுப்பு அதிகம். அந்த வகையில் தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவை கொழுப்பு அதிகமுள்ளவை. இவற்றில் சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட் என்பது இருக்கும். இவற்றை உட்கொள்ளும்போது கல்லீரலானது, அதை சட்டென கொழுப்பாக மாற்றி, ரத்தத்தில் சேர்த்துவிடும். அது இதயத்துக்கு நல்லதல்ல.
அதுவே அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்றவற்றில் இந்தப் பிரச்னை குறைவு. இந்தக் கொழுப்பானது ரத்தத்தில் சட்டென படியாது. அதற்குள் நம் ஆற்றலானது அதைக் கரைத்துவிடும். கடலை எண்ணெய் ஓரளவு சேர்த்துக்கொள்ளலாம். ரைஸ்பிரான் ஆயில் எனப்படும் அரிசித்தவிட்டு எண்ணெயை 'ஹார்ட் ஆயில்' என்ற பெயரில் பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். மற்ற எண்ணெய்களோடு ஒப்பிடும்போது, அரிசித்தவிட்டு எண்ணெய் ஆரோக்கியமானது.
எந்த நட்ஸிலும் கொழுப்பு கிடையாது. சில வகை நட்ஸில் ஆபத்தில்லாத அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட் சிறிதளவு இருக்கும். ஆனாலும், அது கல்லீரலால் கொழுப்பாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கும் அபாயம் இருக்காது. நட்ஸ் நல்லது என்று பாதாம் சாப்பிடுவோருக்கு ஒரு அட்வைஸ், அதை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது. தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. தோலை நீக்கிவிட்டால் சத்துகளும் போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதேபோல நட்ஸை எண்ணெயோ, நெய்யோ விட்டு வறுத்துச் சாப்பிடுவதும் தவறு. நட்ஸ் நல்லது என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் பருமன் என்பது இதயம் உட்பட எல்லா உறுப்புகளுக்கும் ஆபத்தானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.