Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?
Doctor Vikatan: சமீபத்தில் செய்த ரத்தப் பரிசோதனையில் எனக்கு ப்ரீடயாபட்டிஸ் (pre-diabetes) என்று வந்திருக்கிறது. இதற்கு இப்போதே மருந்துகள் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டுமா? ப்ரீ டயாபட்டிஸுக்கு மருந்துகள் எடுக்கத் தொடங்கினால் நிறுத்தவே முடியாது என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பொது மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி
உங்கள் கேள்வியில் வயதும் பாலினமும் குறிப்பிடப்படவில்லை. வயது, பாலினம் போன்றவற்றுக்கேற்ப மருத்துவ ஆலோசனைகள், பரிந்துரைகள் வேறுபடும். நீரிழிவு சிகிச்சைக்கும் அது பொருந்தும்.
ப்ரீ டயாபட்டிஸ் (pre-diabetes) என்பது ஒரு நிலை. பலரும் நினைக்கிற மாதிரி அது ஒரு நோய் அல்ல. ஒருவரது உடலில் இன்சுலின் சுரப்பின் செயல்பாடு குறைவாக இருப்பதைக் காட்டுவதுதான் ப்ரீ டயாபட்டிஸ். அதாவது, நீரிழிவுக்கு முந்தைய நிலை. இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தால் அது நீரிழிவாக மாறலாம் என்பதற்கான அலெர்ட் சிக்னல்தான் ப்ரீ டயாப்ட்டிஸ் என்ற நிலை. ப்ரீ டயாப்ட்டிஸ் என்று வந்துவிட்டாலே உடனே மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்றோ, வாழ்நாள் முழுவதும் அதைத் தொடர வேண்டும் என்றோ அர்த்தமில்லை.
உங்களுக்கு ப்ரீ டயாப்ட்டிஸ் என்று காட்டுவதால், இப்போதே நீங்கள் வாழ்வியல் மாற்றங்கள், உணவியல் மாற்றங்களைப் பின்பற்றத் தொடங்கினால், அது டயாபட்டிஸாக மாறாமல் தடுக்கலாம். உங்களுக்கு வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யாதவர் என்றால் இனி அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களைச் சரியாகப் பின்பற்றினாலே, நீங்கள் நீரிழிவாளராக மாறுவதைத் தவிர்க்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.