Doctor Vikatan: பாதாமை எப்படிச் சாப்பிடணும்? ஊறவைத்து தோலுரித்தது, வறுத்தது, பச்சையாக.. எது சரி?
Doctor Vikatan: பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்... பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிதான் சாப்பிட வேண்டுமா... இது எல்லா நட்ஸுக்கும் பொருந்துமா... பேலியோ டயட்டில் 100 பாதாம் எல்லாம் எடுத்துக்கொள்கிறார்களே, அது சரியானதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நட்ஸில் கலோரிகள் மிகவும் அதிகம். உதாரணத்துக்கு, 100 கிராம் பாதாமில் 655 கலோரிகள் உள்ளன. சுமார் 20 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம் வால்நட்ஸில் 687 கலோரிகள் உள்ளன. 15 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம் பிஸ்தாவில் 626 கலோரிகளும், 19 கிராம் புரதமும் உள்ளன.
நட்ஸை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது.
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்வதுதான் சரியானது.
பாதாமை பொறுத்தவரை அதன் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதுதான் சரியானது. ஏனெனில் அதன் தோலில் உள்ள ஃபைட்டேட் எனும் பொருளானது, மற்ற சத்துகள் உட்கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடும்.
எனவே, பாதாமை தோலுடன் எடுக்கும்போது நட்ஸில் உள்ள இரும்புச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் உள்ளிட்ட பிற ஊட்டங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனால்தான் முதல்நாள் இரவே பாதாமை ஊறவைத்துவிட்டு, மறுநாள் தோல் நீக்கிவிட்டுச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர் பலரும், நட்ஸ் மிக நல்லது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதுதான். ஆனாலும், அவற்றில் கலோரி அதிகம் என்பதால் அளவு மிக முக்கியம்.
பாதாம் எடுத்துக்கொள்வது குறித்து ஓர் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அதில், 30 கிராம், அதாவது எண்ணிக்கையில் 10 அல்லது 12 என்ற அளவில் பாதாமை சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவானது சீராக இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இரவு ஊறவைத்த நட்ஸை காலையில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. அதன் பிறகு உடற்பயிற்சி செய்துவிட்டு அல்லது வாக்கிங் முடித்துவிட்டுதான் காபியோ, டீயோ எடுத்துக்கொள்வோர் இருக்கிறார்கள். இப்படி எடுத்துக்கொள்வதும் நல்லதுதான்.
பொதுவாக மாலை 4 மணிவாக்கில் பலருக்கும் ஒருவித பசியோ, உணவுத்தேடலோ வரும். அப்போது நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். நட்ஸை ஓட்ஸ் அல்லது பழத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

100 பாதாம் எடுப்பதெல்லாம் மிகத் தவறானது. சோஷியல் மீடியாவில் பரப்பப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள். அப்படிச் சொல்லப்படும் உணவு ஆலோசனைகள் பொதுவாக எல்லோருக்குமானவை என்று அர்த்தமில்லை.
ஒருவரின் வயது, உடல்நிலை, உடல் எடை, உயரம், வாழ்க்கைமுறை என பல விஷயங்களைப் பொறுத்தே அந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட வேண்டுமா, கூடாதா என்று முடிவு செய்யப்படும்.
உங்களுக்கு அது தேவையா, உங்கள் இலக்கு என்ன என்று பார்த்துவிட்டு முறையான நிபுணரின் ஆலோசனையோடு பின்பற்றுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.