Doctor Vikatan: முளைகட்டிய பயறு, வேகவைத்தது... எது பெஸ்ட்? எப்படி சாப்பிடணும்?
Doctor Vikatan: முளைகட்டிய பயறு.... வேகவைத்த பயறு... இரண்டில் எதில் சத்துகள் அதிகம்.... முளைகட்டிய பயறு சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வருமா... எந்தெந்தப் பயறுகளை முளைகட்டிச் சாப்பிடலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

வேகவைத்த பயறு வகைகளைவிட, ஊறவைத்து, முளைகட்டிய பயறு வகைகளே சிறந்தவை. முளைகட்டும்போது அவற்றில் ஈஸ்ட்ரோஜென் என்கிற என்ஸைம் அதிகரிக்கிறது. பயறுக்கே உரித்தான வாயுவை உண்டாக்கும் தன்மையும் முளைகட்டுவதால் நீங்கிவிடும்.
பயறு வகைகளை முளைகட்டச் செய்வதால் அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் தன்மை அதிகரிக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துகள் சற்று அதிகமாகக் கிடைக்கும். முளைகட்டிய பயறில் நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் செரிமானமாகிவிடும். பயறை சாதாரணமாகச் சாப்பிடும்போது செரிமான பிரச்னையை எதிர்கொள்வோருக்குக்கூட, அவற்றை முளைகட்டச் செய்து சாப்பிடும்போது செரிமான பிரச்னை வருவதில்லை.
எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு முளைகட்டிய பயறு வகைகள் சிறந்த சாய்ஸ். சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வைத் தரும். விளையாட்டில் ஈடுபடுவோர், உடற்பயிற்சி செய்வோர், ஜிம் செல்வோரெல்லாம் கொண்டைக்கடலையை ஊறவைத்து, காலையில் சாப்பிடுவதைப் பார்க்கலாம். அது தசை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். அதையே முளைகட்டச் செய்து சாப்பிடும்போது, அதன் பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். முளைகட்டச் செய்வதால் அவற்றிலுள்ள புரதச்சத்து இன்னும் மேம்படுகிறது.
பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு, கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை முளைகட்டச் செய்யலாம். முடிந்தவரை எல்லா பயறு வகைகளையும் முளைகட்டச் செய்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. பச்சைப்பயறு போன்றவற்றை முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் நீரைவடித்து, சுத்தமான துணியில் மூட்டைகட்டி வைத்தால், அடுத்தநாளே முளைவிடும். மூட்டை கட்டி வைக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை. ஊறவைத்த பயறை நீரை வடித்துவிட்டு, ஹாட் பாக்ஸில் போட்டு, மூடிவைத்துவிட்டால், அன்று மாலையே முளை வந்திருப்பதைப் பார்க்கலாம்.
ஆனால், ராஜ்மா, வெள்ளை கொண்டைக்கடலை போன்ற சில வகைகள் முளைகட்ட நேரமெடுக்கும். ஆனாலும் முளைவரும். பெரிய அளவில் முளை வர வேண்டும் என அவசியமில்லை. சின்னதாக வந்தாலே அதன் ஆரோக்கிய பலன்கள் கூடும் என்பதால் அதையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.