Doctor Vikatan: ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் மூட்டுவலி வருமா?
Doctor Vikatan: என்னுடைய தோழி எடைக்குறைப்புக்காக ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தார். அதன் காரணமாக அவருக்கு மூட்டுவலி வந்துவிட்டது. மருத்துவர் ஸ்கிப்பிங்கை தவிர்க்கச் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார். ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் மூட்டுவலி வரவோ, கர்ப்பப்பை இறக்கம் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் எந்தவிதமான பாதக விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், புதிதாக ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்கள், மெதுவாகச் செய்ய வேண்டும். சிலர் ஆர்வக்கோளாறின் காரணமாக எடுத்த எடுப்பிலேயே ஆயிரம் ஸ்கிப்பிங் மாதிரியெல்லாம் செய்வதுண்டு.
எனவே, முதல் நாளே அளவுக்கதிகமாகச் செய்வதைத் தவிர்த்து, உங்கள் உடற்பயிற்சிகளோடு சேர்த்து 100 முறை போன்று ஸ்கிப்பிங் செய்வதை வழக்கமாக்கலாம். வெறும் தரையில் ஸ்கிப்பிங் செய்வது, தவறி விழச் செய்யலாம், மூட்டுவலியை ஏற்படுத்தலாம். அதேபோல ரொம்பவும் உயரமாக ஜம்ப் செய்து ஸ்கிப்பிங் செய்தாலும் உங்கள் மூட்டு பாதிக்கப்படலாம்.
ஸ்கிப்பிங் மிகச் சிறந்த கார்டியோ பயிற்சியும்கூட. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஸ்கிப்பிங்குடன், ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யும்போது சீக்கிரம் பலன் தெரியும்.
ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கும் முன், அது உங்களுக்கு சிரமமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூட்டு மற்றும் கணுக்கால்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் ஸ்கிப்பிங் செய்வதைத் தவிர்க்கவும். அதை மீறிச் செய்தால் உங்கள் பிரச்னைகள் அதிகரிக்கலாம். கர்ப்பப்பையில் உங்களுக்கு வேறு ஏதும் பிரச்னைகள் இருந்தால் ஸ்கிப்பிங்கை தவிர்க்கலாம். அப்படியில்லாத பட்சத்தில் ஸ்கிப்பிங் செய்வது, கர்ப்பப்பையை பாதிக்காது.
ஸ்கிப்பிங் செய்யும் சரியான முறையைத் தெரிந்துகொண்டு, நல்ல தரையில், சரியான ஷூஸ் அணிந்தபடி செய்ய வேண்டியது முக்கியம். சிறிய வயதில் ஸ்கிப்பிங் செய்ததுபோலவே இப்போதும் செய்யலாம் என நினைத்துக்கொண்டு செய்ய வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.