Siragadikka Aasai: "சீரியல் விட்டுட்டு வந்தாதான் பட வாய்ப்பு கிடைக்கும்னா" - San...
Eng vs Ind: "ஒவ்வொரு போட்டியிலும் போராடினோம்; சண்டை செய்தோம்" - வெற்றியில் நெகிழும் கே.எல்.ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 2-2 என இந்திய அணி டிரா செய்திருக்கிறது.
இந்த ஓவல் போட்டியைப் பரபரப்பாக திரில்லாக வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

கே.எல்.ராகுல் பேசியதாவது, "இந்த வெற்றி அளப்பரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நான் இன்னும் பெரிய ஸ்க்ரீனில் ஓடிக்கொண்டிருக்கும் ஹைலைட்ஸைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 2 மாதங்களில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிறையச் சவால்களைக் கடந்து வந்திருக்கிறோம்.
இன்று காலையில் எங்கள் மீது அதிக அழுத்தம் இருந்தது. கேட்ச்கள் ட்ராப் ஆனது, சிக்சர்கள் சென்றன. ஆனாலும் வென்றுவிட்டோம். அணியின் செயல்பாட்டை நினைக்கையில் பெருமிதமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் என்னுடைய பேட்டிங்கும் திருப்தியாகவே இருக்கிறது.
அணிக்காகப் பொறுப்பை உணர்ந்து ஆடிவிட்டேன். சிராஜ், கில், ஜடேஜா, பண்ட், பிரஷித், வாஷி எனப் பல வீரர்களும் சிறப்பாக ஆடியிருந்தனர். இன்னும் கொஞ்ச நேரத்தில் நாங்களெல்லாம் சோர்வடைந்து விடுவோம். ஆனாலும், நாங்கள் இந்த வெற்றியைக் கொண்டாடாமல் விடமாட்டோம்.

நிறைய ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்டேன். சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறேன். இந்த அணி உலகக் கோப்பையை வென்றதைப் பார்த்திருக்கிறேன். உலகக் கோப்பையோடு எதையும் ஒப்பிட முடியாது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டால் சர்வைவ் ஆக முடியுமா எனும் கேள்வி எழுந்திருக்கும் சூழலில், அதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இரு அணியினரும் ஆடியிருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் போராடியிருக்கிறோம். நாங்கள் சண்டை செய்திருக்கிறோம்.
இது 2-2 என டிராதான். ஆனாலும், இந்த வெற்றியை இந்தியக் கிரிக்கெட்டின் உச்சமாகப் பார்ப்பேன். இந்திய அணி நிறையவே மாற தொடங்கியிருக்கிறது. இங்கிருந்து நாங்கள் நிறையத் தொடர்களை வெல்வோம்.
ரோஹித், விராட், அஷ்வின் இல்லாதது இரண்டு வாரங்களுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. எல்லா வீரர்களும் என்னிடம் வந்து இங்கிலாந்து சூழல் எப்படியிருக்கும் என வினவினர்.

அப்போதுதான் அணியில் என்னுடைய பொறுப்பு மாறியிருப்பதை உணர்ந்தேன். கில் மிகச்சிறப்பாக முன் நின்று வழிநடத்தினார். ஒரு ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டனாக கில் மாறுவார்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...