Guar: இந்தியா உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட்; எதற்குத் தெரியுமா?
இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்படும் கொத்தவரங்காய், உலக சந்தையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவில் கொத்தவரங்காய்க்கு அதிக டிமெண்ட் இருப்பதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தவரங்காயிலிருந்து பிசின் தயாரிக்கப்படுகிறது.
இந்தக் கொத்தவரை பிசின் (Guar Gum), உணவுப் பொருட்கள், மருந்துகள், காகிதம், துணி, அழகு சாதனப் பொருட்கள் ஆகிய துறைகளில் மட்டுமல்லாமல், பெட்ரோலியத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கொத்தவரங்காய் பயிரிடப்பட்டாலும், உலகின் 80 சதவிகித உற்பத்தி இந்தியாவில்தான் நடைபெறுகிறது.

அதில், ராஜஸ்தான் மாநிலம் மட்டும் 72 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது. குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களிலும் இந்தப் பயிர் வளர்க்கப்படுகிறது.
ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பயிரிடப்பட்ட கொத்தவரங்காய், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடைக்கு வருகிறது.
புதை படிவ எரிபொருள் (Fossil Fuel) எடுக்கும் தொழிலில் கொத்தவரை பிசின் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஷேல் வகை பாறைகளிலிருந்து ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் (Hydraulic Fracturing) என்ற செயல்முறையைப் பயன்படுத்தி பூமியிலிருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய்யை எடுக்க இது பயன்படுத்தப்படுவதாக பிபிசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியில் முன்னிலை
இந்தியாவில் உற்பத்தியாகும் கொத்தவரை பிசினில் சுமார் 90 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 4,17,674 மெட்ரிக் டன் கொத்தவரை பிசினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தேவை
இந்தியாவின் கொத்தவரை பிசினின் மிகப்பெரிய நுகர்வோராக அமெரிக்கா திகழ்கிறது. இதுதவிர, ஜெர்மனி, ரஷ்யா, நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கொத்தவரை பிசின் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அவசியமான கொத்தவரை பிசின் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பது, விவசாயிகளுக்குப் பொருளாதாரப் பலன்களை மட்டுமல்லாமல், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிக்கிறது.