Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
இது மாம்பழம் சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? மாம்பழம் கோடையில்தான் சீசன் என்பதால், 'மாம்பழம் சூடு; வெயில் காலத்துல அதைச் சாப்பிட்டா கட்டி வந்துடும்' என்கிற பேச்சு ரொம்ப காலமாகவே நமக்கு மத்தியில் இருக்கிறது.
அது உண்மைதானா என, சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் மருத்துவர் விஷால் அவர்களிடம் கேட்டோம்.
''மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வராது. மாம்பழத்தில் வைட்டமின் A, C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் சரும ஆரோக்கியத்திற்கு நன்மைதான் அளிக்கும்.
இருப்பினும், சிலருக்கு மாம்பழம் உட்கொள்ளும்போது உடலில் உஷ்ணம் அதிகரித்து, சருமத்தில் எண்ணெய்ப்பசை (sebum) உற்பத்தி அதிகமாகி, கட்டி ஏற்படுவதாக ஒரு கருத்து பரவி வருகிறது.
இது அனைவருக்கும் பொருந்தாது. தவிர, அறிவியல்ரீதியாக இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. மாம்பழம் சாப்பிடுவதால் கட்டி வருவதைவிட உணவு ஒவ்வாமை, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சரும பராமரிப்பு பழக்கங்கள், அல்லது அதிக எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வதால் முகப்பரு, கட்டிகள் ஏற்படலாம்.
உங்களுக்கு மாம்பழம் சாப்பிட்ட பிறகு கட்டி வருவதாக உணர்ந்தால், உணவியல் நிபுணர் ஒருவரை அணுகி ஆலோசனைப் பெறலாம்.
சில ஆயுர்வேத மருத்துவர்கள் மாங்காய் உஷ்ணம் என்றும், அது கட்டிகள் வரக் காரணமாகலாம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் உற்பத்தியாகும்; இதனால் சில ஹார்மோன்கள் சுரப்பதால், சிலருக்கு முகப்பரு வரலாம்.
சில நேரங்களில் மாம்பழத்தில் இருக்கிற வேதிப்பொருள் வாய் மற்றும் முகத்தில் பட்டால் ஒவ்வாமை ஏற்படலாம்.
மற்றபடி, மாங்காய் சாப்பிடும் அனைவருக்கும் கட்டிகள் வராது. ரசாயனம் தெளித்த பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிட்டால் உடலில் சில அழற்சிகள் ஏற்படலாம்.
இவற்றைத் தவிர்க்க, மாங்காயைச் சில நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு உண்ணலாம். முடிந்தவரைப் பதப்படுத்தப்பட்ட மாங்காய் உணவுகளைச் சாப்பிடக்கூடாது.
முகத்தைத் தினமும் இருமுறை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்; மாம்பழம் பிடிக்கும் என்றாலும் அளவாகச் சாப்பிடுங்கள். கட்டி, முகப்பருவெல்லாம் வராது'' என்கிறார் மருத்துவர் விஷால்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR