IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?
ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2), நியூசிலாந்து (1) ஆகிய அணிகளும், B பிரிவில், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் முன்னாள் சாம்பியன்கள் ஆஸ்திரேலியா (2), தென்னப்பிரிக்கா (1) ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில், தொடரின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

இதனால், நாளை இந்தியாவுடன் மோதும் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது பாகிஸ்தான். இத்தகைய சூழலில், இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என முன்னாள் இந்தியப் பந்துவீச்சாளர் அதுல் வாஸ்ஸன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நாளைய போட்டி குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அதுல் வாஸ்ஸன், ``என்னைப் பொறுத்தவரைப் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும். ஏனெனில் அப்போதுதான் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது பாகிஸ்தானை நீங்கள் வெற்றிபெற விடவில்லையென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்... இதுவே பாகிஸ்தான் வென்றால் அது போட்டியாக மாறும். ஒரு சமமான போட்டி இருக்க வேண்டும்." என்று விளக்கினார்.

மேலும், இந்திய அணி குறித்துப் பேசிய அதுல் வாஸ்ஸன், ``உங்களிடம் நிறைய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். கில், ரோஹித், கோலி முதல் அக்சர் படேல் வரை எட்டாவது விக்கெட் வரை பேட்டிங் இருக்கிறது. அதோடு, ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களை ரோஹித் தேர்ந்தெடுத்திருக்கிறார். துபாய்க்கு இது சிறந்த அணி. உங்களிடம் இருப்பதை நம்பி முன்னேறுங்கள்." என்று கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும், 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் அதுல் வாஸ்ஸன் மொத்தமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play