அஸெஞ்ஜர் நிறுவனத்திலிருந்து 11,000+ ஊழியர்கள் நீக்கம்! சிஇஓவின் எச்சரிக்கை தகவல்
IND vs SL: கடைசி நிமிடம் வரை டஃப் கொடுத்த இலங்கை; சூப்பர் ஓவரில் வெற்றியைப் பறித்த இந்தியா
நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கையுடன் நேற்று (செப்டம்பர் 26) மோதியது.
இப்போட்டியில், ஷிவம் துபே, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, இந்தியா அணியில் ஓப்பனிங்கில் இறங்கிய அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணியை இரண்டாவது ஓவரிலேயே கில்லின் விக்கெட்டின் மூலம் உடைத்து இலங்கை.
அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரங்களில் ஏமாற்றமளித்து வெளியேறினாலும் அபிஷேக் சர்மா அதிரடியாக அடித்து இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தி 61 ரன்களில் அவுட்டானார்.

அதன்பின்னர் கைகோர்த்த திலக் வர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி பார்ட்னர்ஷிப்பில் அரைசதம் அடிக்க 150 ரன்களைக் கடந்தது இந்தியா.
இறுதியில் அக்சர் படேலின் கேமியோ ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் குவித்தது இந்தியா.
அதையடுத்து, 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. முதல் ஒவேரிலேயே குசல் மெண்டிஸை ஹர்திக் டக் அவுட் ஆக்கினாலும் அதன்பின்னர்தான் ஆட்டம் இன்னும் சூடுபிடித்தது.
பதும் நிசங்கா - குசல் பெரேரா கூட்டணி இந்தியாவின் பவுலிங்கை சிதறடித்து பார்ட்னர்ஷிப்பில் சென்சுரி போட்டது.

இருவரும் அரைசதம் கடந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த வேளையில் குசல் பெரேரா விக்கெட்டை எடுத்து இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் வருண் சக்ரவர்த்தி.
அடுத்துவந்த இலங்கை கேப்டனும், கமிந்து மெண்டிஸும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த பதும் நிசங்காவுடன் கைகோர்த்தார் டசுன் ஷானகா.
இந்திய பவுலரின் எவரிடமும் சிக்காத பதும் நிசங்கா வெற்றிகரமாக சதமடிக்க, கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதி ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா முதல் பந்திலேயே பதும் நிசங்காவை அவுட்டாக்க வெற்றி இந்தியா பக்கம் வந்தது.
ஆனால், அடுத்து களமிறங்கிய ஜனித் லியனாகே இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் அடித்து பந்துகளில் டசுன் ஷானகாவிடம் கொடுத்தார்.
4-வது பந்தில் இரண்டு ரன்கள் ஓடி ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்துக்கொண்ட டசுன் ஷானகா 5-வது பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார்.

கடைசி பந்தில் 3 ரன்கள் அடித்தால் இலங்கை வெற்றி என்ற நெருக்கடியில், டசுன் ஷானகாவால் இரண்டு ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால் போட்டி டிரா ஆனது.
இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்திய அணியில் சூப்பர் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே குசல் பெரேராவை அவுட்டாக்கியதோடு இரண்டு ரன்களில் இன்னொரு விக்கெட்டையும் எடுத்து இலங்கையின் இன்னிங்ஸை முடித்தார்.

அடுத்த 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே 3 ரன்கள் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.
இலங்கை அணியில் சதமடித்த பதும் நிசங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
41 வருட ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை இறுதிப்போட்டியில் மோதுகின்றன.