IPL 2025: "13 வயது வைபவை மூத்த அண்ணனாக இருந்து வழிநடத்துவேன்" - ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல் Jio Hotstar இல் ஒளிபரப்பாகவிருக்கும் நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அதில் ஒளிபரப்பாகும் 'SuperStar' எனும் நிகழ்ச்சியில் வரவிருக்கும் ஐ.பி.எல் தொடர் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.

"இன்றைய இளம் வீரர்களிடம் தன்னம்பிக்கைக்குக் குறைவே இல்லை. தைரியமானவர்களாக இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமையையும், எந்த பாணியில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதையும் அவர்கள் நன்கு புரிந்துகொள்கிறார்கள். எங்கள் அணியின் இளம் வீரரான வைபவ் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்; அவர் அகாடமியில் பயிற்சிக்குள் இருந்தபோதே, ஏராளமான சிக்சர்களை அடித்தார். ஒரு மூத்த சகோதரனாக அவருக்குத் துணை நிற்பேன். அவரிடம் தேவையான எல்லா திறன்களும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் எப்போதும் வீரர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது. அவருக்கு இது மிகவும் உதவும். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா அணிக்காக அவர் விளையாடக்கூடும். இப்போதைக்கு அவர் ஐபிஎல்லுக்குத் தயாராக இருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது." என்று பேசியுள்ளார்.
தனது அணியின் முக்கியமான வீரர்களான துருவ் ஜுரேல், ரியான் பராக், மற்றும் ஹெட்மையரை தக்க வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் சாம்சம் பேசுகையில், "இது அணிக்குப் பெரும் பலம் தரும். ஒரே அணியில் நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் இருந்தால், அவர்களிடையே நல்ல புரிதல் உருவாகும். இது அணியின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, கேப்டனாக என்னுடைய வேலையையும் எளிதாக்குகிறது" என்றார்.
மேலும், ஜோஸ் பட்லர் பற்றிப் பேசிய அவர், "ஜோஸ் பட்லர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். அவர் எனக்கு மூத்த சகோதரனைப் போல் இருந்தார். நான் கேப்டன் ஆனபோது, அவர் துணை கேப்டனாக இருந்து எனக்குப் பெரிதும் உதவினார். அவரைத் தக்கவைக்க முடியாமல் வெளியே அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது எனக்கு மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. இங்கிலாந்து தொடரின் போது கூட, அவருடன் டின்னர் சாப்பிடும்போது, இதைப் பற்றிப் பேசினேன். பட்லர் எங்களின் ராஜஸ்தான் குடும்பத்தில் ஒருவர்

தோனியுடனான தனது உறவைப் பற்றிப் பேசுகையில், "ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரும் மஹி பாயியைச் சுற்றி இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சென்னை அணிக்கு எதிராக விளையாடும்போதெல்லாம், அவருடன் உட்கார்ந்து பேச வேண்டும், அவர் எப்படிச் செயல்படுகிறார் என்று கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அது என் கனவு போல இருந்தது.

ஷார்ஜாவில் சென்னைக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் நான் 70-80 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வாங்கினேன். அதன் பிறகு, மஹி பாயியைச் சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நேற்றே கூட அவரை மீண்டும் சந்தித்தேன். என் கனவு நிஜமாகி விட்டது போல ஒரு உணர்வு. அவருடன் கலந்துரையாடுவது எனக்குப் பெரும் சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
