IPL 2025 : 'வேகவேகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் அணிகள்!' - பட்லருக்கு ப...
IPL: ``CSK உன்னை கவனிக்கிறது’ என அவர்தான் முதலில் சொன்னார்’ - ஆயுஷ் மாத்ரே சொல்லும் MI வீரர் யார்?
ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.
இருப்பினும், அடுத்த சீசனுக்கான வீரர்களைக் கண்டெடுக்கும் வகையில் சென்னை அணி கடந்த ஐந்து போட்டிகளாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.
அவ்வாறு, ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக தொடரின் பாதியில் எடுக்கப்பட்ட 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, சென்னை அணிக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடிவருகிறார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், மும்பைக்கெதிரான போட்டியில் களமிறங்கி தனது ஐ.பி.எல் கரியரைத் தொடங்கினார்.
அப்போட்டியில், அதிரடியாக 213 ஸ்ட்ரைக் ரேட்டில் 32 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்த ஆயுஷ் மாத்ரே, ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியில் 94 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதுவரை, 5 போட்டிகளில் ஆடியிருக்கும் இவர், 183 ஸ்ட்ரைக் ரேட்டில் 163 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த நிலையில், சென்னை அணி தன்னை மாற்று வீரராக எடுப்பதற்கு முன்பாகவே அதுபற்றி மும்பை வீரர் தன்னிடம் கூறியதாக ஆயுஷ் மாத்ரே கூறியிருக்கிறார்.
`விரைவில் அழைப்பார்கள், தயாராக இருங்க’
சென்னை அணியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கும் வீடியோவில் பேசிய ஆயுஷ் மாத்ரே, "சூர்யகுமார் யாதவ் என்னிடம், 'சி.எஸ்.கே அணி உங்களைத்தான் தேடுகிறது. விரைவில் உங்களை அழைப்பார்கள், தயாராக இருங்கள்' என்றார்.
நானும் அதற்கு மனதளவில் தயாரானேன். அதன்பிறகு, ஏ.ஆர். ஸ்ரீகாந்த் (head talent scout for CSK) சார் என்னிடம், `நீங்கள் இரண்டு நாள்கள் இங்கு வரவேண்டும். உங்கள் ஆட்டத்தை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்' என்றார்.
அதன்பின்னர், இந்த அணியின் ஒரு வீரராக இருக்கப் போகிறேன் என உற்சாகமாக இருந்தேன். சி.எஸ்.கே அணியுடன் வலைப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆவலாக இருந்தேன்" என்று கூறினார்.
மேலும், விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவுடனான அனுபவம் குறித்து பேசிய ஆயுஷ் மாத்ரே, "விஜய் ஹசாரே டிராபியில் அவருடன் நிறைய நேரம் செலவிட்டேன். எனக்கு எப்போதும் ஆதரவளித்தார்.
இரண்டு, மூன்று இன்னிங்ஸ்களில் அவுட்டானபோது, `உன் நம்பிக்கையை இழக்காதே' என என்னிடம் கூறினார்.
எனவே, களத்தில் எப்போதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். உங்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம்பிக்கையோடு இருக்கிறீர்கள் என்பதைத்தான் எதிரணிக்கு காட்ட வேண்டும்." என்று கூறினார்.