செய்திகள் :

J&K: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 20-க்கும் மேற்பட்டோர் பலி?

post image

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், சுமார் 25 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகிவருகிறது. இந்தச் சம்பவத்தை அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக ஸ்ரீநகருக்கு விரைந்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர்

மேலும் இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்தத் தீவிரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது. அது மேலும் வலுவடையும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, "பேரதிர்ச்சியடைந்தேன். சுற்றுலாப் பயணிகள் மீதான இந்தத் தாக்குதல் ஒரு அருவருப்பானது. இதைச் செய்தவர்கள் மனிதாபிமானமற்றவர்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறப்பு எண்ணிக்கை இன்னும் உறுதியாகாததால், அதன் விவரத்தைச் சொல்ல விரும்பவில்லை. நிலைமை தெளிவாகும்போது அவை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படும். சமீப காங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை விட இந்தத் தாக்குதல் மிக மோசமானது" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதோடு, முதல்வர் இல்லத்திலிருந்து சம்பவ இடத்துக்கு உமர் அப்துல்லா கிளம்பியிருக்கிறார்.