செய்திகள் :

Kamala Harris: தனித்துக்காட்டத் தவறியது டு பாகுபாடு..! - கமலா ஹாரிஸ் தோல்விக்கு காரணம் என்ன? - அலசல்

post image

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றிருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அதிர்ச்சிச் தோல்வியடைந்திருக்கிறார். இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சாதனையை புரிந்திருப்பார். ஆனால், `அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்று முழங்கிய ட்ரம்ப்பின் பிரச்சார அலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். உண்மையில், கமலா ஹாரிஸ் தோற்றதற்கான காரணம் என்ன? விரிவாக அலசுவோம்.

டிரம்ப்

கடந்த 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும், கமாலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வெற்றியின்மூலம் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றார். அதேசமயம், ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட ட்ரம்ப் படுதோல்வியடைந்தார். பைடன் - கமலா ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்திருந்தது. குறிப்பாக, அமெரிக்கா அதிக உயிரிழப்புகளை கொரோனாவுக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. அந்த தாக்கம், சில ஆண்டுகளில் கொரோனா அலைகள் முடிவடைந்த பின்னரும் கடுமையான பொருளாதார சரிவுக்கு நாட்டை இழுத்துச் சென்றது. பணவீக்கம், விலைவாசி உயர்வு என அடுத்தகட்ட துன்பத்துக்கு அமெரிக்க மக்கள் ஆளாகினர். இவற்றை சமாளிப்பதற்காக பைடன் - கமலா கொண்டுவந்த திட்டங்கள், கொள்கைகள் எதுவும் வெகுமக்களுக்கு பலனளிக்காமல் போனதால் ஜனநாயகக் கட்சிமீதான அதிருப்தி அலை மக்கள் மத்தியில் அதிகம் வீசத்தொடங்கியது.

இந்த நிலையில், நான்காண்டு அதிபர் பதவி காலம் முடிவடையும் தருவாயில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் ஜோ பைடன் போட்டியிட முயற்சி செய்தார். ஆனால், மக்கள் அதிருப்தி, வயது மூப்பு, தேர்தல்நேரத்தில் கொரோனா தொற்று உள்ளிட்டக் காரணங்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் பலரே பைடனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், கமலா ஹாரிஸின் பெயரும் அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருந்தது.

அப்போதே ஜனநாயக் கட்சி இரண்டுபட்டுப்போனதாக விமர்சனங்கள் எழுந்தன. பின்னர், மிகத் தாமதமாக தனது பிடிவாதத்தை ஜோ பைடன் விட்டுக்கொடுக்க, ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளரானார் கமலா ஹாரிஸ். தேர்தலுக்கு எஞ்சியிருந்த வெறும் நான்கு மாதங்களில் திட்டமிட்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள கமலா ஹாரிஸ் திணறினார். அதேசமயம், ஏற்கெனவே பைடனின் ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி நீடித்திருக்கும் நிலையில், பைடன் நிர்வாகத்தையே பின்பற்றும் வகையில் பிரச்சாரம் செய்தார். `பைடன் நிர்வாகத்திலிருந்து மாறுபட்ட, மேம்பட்ட, தனித்தன்மையான ஆட்சியை வழங்குவேன் என்று பிரசாரம் செய்திருந்தால் மக்கள் மத்தியில் செல்ஃப் எடுத்திருக்கும்' என்கிறார்கள் அமெரிக்க அரசியல் வல்லுநர்கள்.

கமலா ஹாரிஸ்

அதேசமயம், தேர்தல் பிரசாரம் முழுக்க, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பையே மும்முரமாகப் பேசி, விமர்சனம் செய்த கமலா ஹாரிஸ் தன்னைப் பற்றியும், தன்னுடைய ஆளுமை, ஆட்சியிலிருந்தபோது செய்த சாதனைகள் என எதையும் பெரிதாகக் குறிப்பிட்டு பேசவில்லை. அதாவது, `டொனால்ட் ட்ரம்ப் வரக்கூடாது' என்று பேசியவர் `தான் ஏன் வரவேண்டும்' என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்யவில்லை என்கிறார்கள்.

ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில், `நீங்கள் செய்த மிகப்பெரிய சாதனை என்ன?' என்று கமலா ஹாரிசைப் பார்த்து கேள்வியாளர் கேட்க, `மிகப்பெரிய சாதனையா...? அதை என்னால் உறுதியாக குறிப்பிட்டு சொல்லமுடியாது' என்று மழுப்பலான பதிலளித்து திணறினார்.

தொடர்ந்து, பல்வேறு ஊடக பேட்டிகளையும் புறக்கணித்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக, எதிரணியின் டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி ஆட்சியின் தவறுகள், கொள்கை முடிவுகள், பைடன், கமலா நிர்வாகத்தை சரமாரியாக விமர்சித்துப் பேசி ஸ்கோர் செய்தார். குறிப்பாக, கமலாவை, `பலவீனமானவர், திறமையற்றவர்' என சரமாரியாக விமர்சித்தார். இது கமலாவுக்கு ஒரு பெருத்த பின்னடைவாக அமைந்தது.

ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்

இந்த அதிபர் தேர்தலில் சட்டவிரோத குடியேற்றம் என்பதுதான் மிகப்பெரிய விவாதமாக இருதரப்பினருக்குமிடையே அனல் பறந்தது. அமெரிக்க நாட்டில் புலம்பெயர்வோரின் சட்டவிரோத குடியேற்றங்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் அதிகரித்துவிட்டதாகவும், பைடன்-ஹாரிஸ் அரசாங்கம் அவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் சுதந்திரமாக நுழைய அனுமதித்ததாகவும் கடுமையாக குற்றம் சாட்டினார் ட்ரம்ப். அதேபோல, குடியரசு கட்சியின் மற்ற தலைவர்களும், ``உண்மையான அமெரிக்க குடிமக்களை விட சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பைடன் - கமலா ஹாரிஸ் முன்னுரிமை அளிப்பதாக விமர்சனம் செய்தனர். `அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற ட்ரம்பின் வாதம் அமெரிக்கர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், கமலா ஹாரிஸ் இதுபற்றி தெளிவான ஒரு முடிவை வழங்காமல், `அனைவருக்குமான அமெரிக்கா' என்று சொன்னதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாக அமைந்துவிட்டது.

அதேசமயம், நாடே பணவீக்கத்தில் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, உக்ரைன் - ரஷ்யா போரில் உக்ரைனுக்கும், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில் இஸ்ரேலுக்கும் கட்டுப்பாடற்ற ஆதரவும், நிதியுதவி, ஆயுத உதவிகளையும் பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் வழங்கியதை அமெரிக்க மக்கள் ரசிக்கவில்லை. மேலும், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அமெரிக்க வாழ் சிறுபான்மையினருக்கும், ஜனநாயகவாதிகளுக்கும் இது கொதிப்பை ஏற்படுத்தியது.

ஜனநாயகக் கட்சியின் இந்த வெளியுறவுக் கொள்கையும் கமலா ஹாரிஸுக்கு எதிராக அமைந்தது. இவை தவிர, கடந்த தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு ஆப்ரிக்க அமெரிக்கர்கள், இலத்தீன் அமெரிக்கர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்துவந்த ஆதரவும் வெகுவாக குறைந்திருந்தது.

கமலா ஹாரிஸ் | Kamala Harris

இத்தனை காரணங்கள் தாண்டி, கமலா ஹாரிஸின் இனமும், பாலினமும் கூட இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதாவது, இந்திய வம்சவளி தாய்க்கும், ஆப்ரிக்க வம்சாவளி தந்தைக்கும் பிறந்த இந்திய வம்சாவளி ஆப்ரிக்க அமெரிக்கர் கமலா ஹாரிஸ் என்பதால், `அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற பெரும்பான்மைவாத அமெரிக்க வெள்ளையாதிக்க மனநிலையும் கமாலா ஹாரிசை தோற்கடித்ததாகச் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேபோல, ஆண் - பெண் என்ற பாலின பேதமும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர். ஏற்கெனவே, 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார். தற்போதும் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்திருக்கிறார். இதுவரையில், அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு பெண்கூட அதிபராக ஆட்சிப்பொறுப்பேற்கவில்லை. இவையெல்லாம், பெரும்பான்மை அமெரிக்கர்களின் ஆணாதிக்க மனநிலையின் போக்கு என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். குறிப்பாக, ``கமலா ஹாரிஸின் தோல்வி வேரூன்றிய இனவெறியை, வெள்ளை பன்முகத்தன்மையை, வெள்ளை மேலாதிக்கத்தின் ஆழமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது!" என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

வடகிழக்குப் பருவமழை: "திமுக அரசின் தோல்வியால் 34 பேர் பலி" - ஆர்.பி. உதயகுமார் சொல்வதென்ன?

"வடகிழக்குப் பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தோல்வியைக் காட்டுகிறது. மக்களைக் கைவிட்டால், மக்கள் விரைவில் உங்களைக் கைவிடும் காலம் வரும்" என்று அ.தி.மு.க- வைச் சேர்ந்த... மேலும் பார்க்க

'மாயமான முதல்வர் வீட்டு சமோசாவுக்கு சிஐடி விசாரணையா?' - இமாச்சல் அரசியலில் சலசலப்பு; நடந்தது என்ன?

இமாச்சல் பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுக்லா. முதல்வர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்குக் கொடுப்பதற்காக மூன்று பாக்ஸ் சமோசா ஆர்டர் செ... மேலும் பார்க்க

Elon Musk : அதிபராகும் ட்ரம்ப்; நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்த எலான் மஸ்க்கின் திருநங்கை மகள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார், பிரபல தொழி... மேலும் பார்க்க

Trump: ட்ரம்ப்பின் ‘கம் பேக்’... உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?

நடந்து முடிந்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி என்பது எதிர்வரக்கூடிய நாள்களில் அமெரிக்கா மட்டுமின்றி உலக பொருளாதாரத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: "பிரதமரின் பொதுக்கூட்டப் பிரசாரம் எனக்குத் தேவையில்லை" - அஜித்பவார் சொல்வதென்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. மும்பையில் உள்ள மான்கூர்டு தொகுதியில் துணை முதல்வர் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்க... மேலும் பார்க்க