Manmohan Singh: ``எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிய காரணம் என்ன?'' -மன்மோகன் சிங் சொன்ன பின்னணி
இந்தியாவின் பொருளாதார சிற்பி எனப் புகழப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92-வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மன்மோகன் சிங் தொடர்பான பல்வேறு செய்திகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதில் ஒன்று மன்மோகன் சிங் அணிந்திருந்த வெளிர் நீல நிறத் தலைப்பாகை.
2006-ம் ஆண்டு அவருக்கு சட்ட முனைவர் பட்டம் வழங்கப்பட்ட விழாவின் போது, எப்போதும் வெளிர் நீல நிறத் தலைப்பாகையுடன் காட்சியளிப்பது குறித்து கேட்டனர். மன்மோகன் சிங் தன் தலைப்பாகை நிறத்துக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, ``கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நான் பட்டம் வாங்கும்போது, பல்கலைக் கழகத்தின் வேந்தரான எடின்பர்க் டியூக், மறைந்த இளவரசர் பிலிப், அப்போது நான் அணிந்திருந்த நீல நிற தலைப்பாகையை சுட்டிக்காட்டி 'அவரது தலைப்பாகையின் நிறத்தைப் பாருங்கள்' எனப் பேசிய தருணங்களை என்னால் மறக்கமுடியாது.
இந்த வெளிர் நீலம் எனக்குப் பிடித்தமான நிறங்களில் ஒன்று. அதன்பிறகு கேம்பிரிட்ஜில் இருந்த நாள்களில் என் நண்பர்கள் என்னை "ப்ளூ டர்பன்" என்று அன்புடன் அழைத்தனர். கேம்பிரிட்ஜில் உள்ள எனது ஆசிரியர்களும் எனது சகாக்களும் வாதத்திற்குத் தயாராக இருக்கவும், ஒருவரின் கருத்துகளை அச்சமின்றி மற்றும் தெளிவாக வெளிப்படுத்தவும் எனக்குக் கற்றுக் கொடுத்தனர். இந்த நற்பண்புகளும் அறிவுசார் உண்மையை நோக்கிச் செல்வதற்கும் இடைவிடாத விருப்பமும் கேம்பிரிட்ஜில் எனக்குள் புகுத்தியது" எனக் குறிப்பிட்டிருந்தார்.