Marana Mass: செளதி அரேபியா, குவைத்தில் தடை செய்யப்பட்ட பேசில் ஜோசப் படம் - இதுதான் காரணமா?
`பொன்மேன்' திரைப்படத்திற்குப் பிறகு பேசில் ஜோசப் நடிப்பில் வெளியாக இருக்கிற திரைப்படம் `மரண மாஸ்'. டார்க் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்திருக்கிறார்.
படத்தை அறிமுக இயக்குநர் சிவபிரசாத் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுமட்டுமல்ல, இத்திரைப்படத்தோடு மம்மூட்டியின் `பசூகா', கலித் ரஹ்மானின் `ஆலப்புழா ஜிம்கானா' ஆகிய மலையாள திரைப்படங்களும் வெளியாகிறது.
இதில் பேசில் ஜோசப்பின் `மரண மாஸ்' திரைப்படம் செளதி அரேபியாவிலும் குவைத்திலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் திருநங்கை ஒருவர் நடித்திருப்பதைக் காரணம் கூறி படத்தை இந்த இரண்டு நாடுகளிலும் தடைச் செய்திருக்கிறார்கள்.
இது குறித்து இப்படத்தின் இயக்குநர் சிவபிரசாத், `` தற்போது `மரண மாஸ்' திரைப்படம் செளதி அரேபியா மற்றும் குவைத் பகுதியில் வெளியாகாது. படத்தில் திருநங்கை ஒருவர் நடித்திருப்பதால் திரைப்படம் அங்கு வெளியாகாது என செளதி அரேபியாவின் தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, திருநங்கை நடிகர் நடித்திருக்கும் காட்சிகளை நீக்குமாறு குவைத் நாட்டிலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. நீக்க வேண்டிய காட்சிகளை நீக்கினால் படத்தை அங்கு வெளியிடலாம் என்கிறார்கள்.
ஆனால், திரைப்படம் செளதி அரேபியாவில் வெளியாகாது. " எனக் கூறியிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு இந்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது.