Mock Drills: `நாடு தழுவிய அவசரகால பாதுகாப்பு ஒத்திகை' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானிடையே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இரண்டு நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவந்த நிலையில், இரு நாடுகளுக்கு மத்தியில் இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட சில இணக்கமான ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன.

இரண்டு நாடுகளின் தூதரக அதிகாரிகளும் திரும்பப் பெறப்பட்டனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்த அறிக்கையில், ``நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும்.
போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்புவது, பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, சைரன் ஒலியின்போது மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இரவில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்தும், குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்.
பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜம்மு - கஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒருமாதக் காலத்துக்கு தேவையான மளிகைப் பொருள்களுடன் ஏற்கெனவே பதுங்கு குழிகளுக்கு சென்றுவிட்டார்கள் என்றும், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.