எனக்கு பயமில்லை... அஸ்வின் தலைசிறந்தவர்: ஆஸி. கேப்டன் அதிரடி!
Nilgiris: 15 வீடுகளை சேதப்படுத்திய யானைகள்... பாதை மாறி ஊருக்குள் நுழைய என்ன காரணம்?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றான நீலகிரி, கூடலூர் வனக்கோட்டத்தில் தொடரும் காடழிப்பு, யானைகளின் வாழிடம் மற்றும் வழித்தட ஆக்கிரமிப்பால் ஏதுமறியா அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் துயரை அனுபவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் நுழையும் யானைகள் சில , வீட்டின் கதவு, ஜன்னல், ஓடுகளை சேதப்படுத்தி உள்ளே நுழைகின்றன. வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, கோதுமை, ராகி போன்ற தானியங்களை உட்கொண்டு வருகின்றன. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வீடுகளுக்குள் யானைகளால் பதறும் மக்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளுக்கு ஓடிச்சென்று உயிர் பிழைத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டிற்குள் திடீரென யானை நுழைந்ததால் வீட்டில் இருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பியுள்ளனர். இதேபோல் கூரை மீதேறி உயிர் தப்பிய நபர் கீழே விழுந்து காயமுற்று சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாள்களில் மட்டும் 15 வீடுகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை உட்கொண்டு சென்றுள்ளன.
நேற்றிரவு சேரங்கோடு பகுதியில் நுழைந்த யானைகள், 3 வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. உள்ளூர் மக்கள் உதவியுடன் யானைகளை விரட்டி மக்கள் உயிர் பிழைத்துள்ளனர். வனத்துறையினர் யானைகளை கண்காணித்து உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த தொழிலாளர்கள், "யானைகள் மேய்ச்சலுக்கும் நீர்நிலைகளுக்கும் செல்லும் பகுதிகளில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுகிறார்கள். மின் வேலிகளையும் தடுப்பு வேலிகளையும் அமைக்கிறார்கள். உணவு தண்ணீர் கிடைக்காமல் பாதை மாறி ஊருக்குள் நுழையும் யானைகளால் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம். குடிசை வீடுகளில் குழைந்தைகள் முதியோர்களை வைத்துக்கொண்டு எப்படி உயிர் வாழ முடியும். வனத்துறை தான் இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் " என்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், "பந்தலூர் பகுதிகளில் நடமாடும் யானைகளில் இரண்டு யானைகள் மட்டுமே குடியிருப்புகளை சேதப்படுத்தி உள்ளே நுழைகின்றன. அவற்றை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும் " என்றனர்.