Operation Sindoor: போர் பதற்றம்; ட்ரம்ப் முதல் புதின் வரை... உலகத் தலைவர்களின் ரியாக்ஷன் என்ன?
இந்தியா பாகிஸ்தானுக்கு மத்தியில் இருந்த மோதல் போக்கு தற்போது ஆப்ரேஷன் சிந்தூரில் வந்து நிற்கிறது. இந்தத் தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் தகர்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. பதிலடி கொடுப்போம் என்றும், இந்தியா இறங்கிவந்தால் நாங்களும் இறங்கிவருகிறோம் எனத் தெரிவிக்கிறது பாகிஸ்தான். இதற்கிடையில், ஜெய்ஷ் - இ - முகம்மது என்ற தீவிரவாதக் குழுவின் குடும்பத்தினர் 10 பேர் இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அதனால், பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில், குடியரசுத் தலைவர், பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ``இரு நாடுகளுக்குமிடையேயான விரோதங்கள் மிக விரைவாக முடிவுக்கு வரும் என நம்புகிறேன். கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏதோ நடக்கப் போகிறது என்பது மக்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்ட பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ``இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேசினேன். இரு தரப்பினரும் இணக்கமான வழிமுறைகளைப் பின்பற்றவும், பதட்டத்தைத் தவிர்க்கவும் வலியுறுத்தினேன்" என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ``இரு நாடுகளுக்கு மத்தியிலான இந்த விவகாரம் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளிடமிருந்து அதிகபட்ச இராணுவக் கட்டுப்பாட்டைக் கோருகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சரும், துணைப் பிரதமருமான அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், ``இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதட்டங்களைத் தணிக்கவும், தவிர்க்கவும் வலியுறுத்தியுறுத்துகிறேன்" என்றார்.
இதற்கிடையில், இந்தியாவிற்கான இஸ்ரேலின் தூதர் ரூவன் அசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` இந்தியாவின் தற்காப்பு உரிமையை, சுய பாதுகாப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களிலிருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
"இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் கவலை அளிக்கிறது. நிதானம் மற்றும் அமைதியான, இருதரப்பு தீர்வுக்கு அழைப்பு விடுக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது ரஷ்யா.