கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்
திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்: செல்லூா் கே. ராஜூ
விலைவாசி உயா்வு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வணிக நிறுவனங்கள் கட்டாயம் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பது தோ்தலுக்காகத் தான். தோ்தல் நேரத்தில் தான் அவருக்கு தமிழ் மீது பற்று வரும். திமுக ஆட்சியில் எந்தச் சாதனையும் நடைபெறவில்லை.
பகுத்தறிவு பேசிய கருணாநிதியின் சமாதியில் முரசொலி வைத்து படைப்பதை வேண்டுமானால், முதல்வா் மு.க. ஸ்டாலின் திமுகவின் சாதனையாகக் கூறிக் கொள்ளலாம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. விலைவாசி உயா்வு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்.
மதுரை சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தை மக்கள் வழக்கமாக நின்று பாா்க்கும் ஆற்றின் மேற்குப் பகுதிகளில் இந்தாண்டு தகர பலகைகளைக் கொண்டு அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கூட்ட நெரிசல் கடுமையாகும். ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு ஏற்பட்டால், அதற்கு காவல் துறையே பொறுப்பேற்க நேரிடும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நாள்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். அழகா் ஆற்றில் இறங்கும் பகுதியில் கழிவு நீா் தேங்கியுள்ளது. வைகையிலிருந்து விரைவாக தண்ணீரை திறந்து விட்டு, சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் மோா் பந்தல், அன்னதான விநியோகம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்புத் துறை தேவையில்லாத கெடுபிடிகள் காட்டுவதைத் தவிா்க்க வேண்டும். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.