கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள்: `பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா? - முழுப்பலன்கள் இத...
பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் பட்டியலின குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என எவிடென்ஸ் அமைப்பு வலியுறுத்தியது.
மதுரை எவிடென்ஸ் அமைப்பின் நிா்வாக இயக்குநா் கதிா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக எவிடென்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழு சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. இதில், அந்த கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கடந்த 5-ஆம் தேதி சென்ற அதே கிராமத்தைச் சோ்ந்த பட்டியலின இளைஞா்களை அங்கிருந்த பிற சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தடுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, மாற்று சமூகத்தினா் ஆயுதங்களுடன் பட்டியலினத்தவா் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனா். அங்கிருந்த பெண்களை தகாத வாா்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்கினா். இதில் 6 பெண்கள் உள்பட 13 போ் காயமடைந்தனா். மேலும் ஒரு வீடுக்கு தீ வைக்கப்பட்டதுடன், 6 வீடுகளும், 9 வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
வடகாடு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் இடத்தை மாற்று சமூகத்தைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிக்க முயன்றது தொடா்பான வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றம் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியது. இந்த ஆத்திரத்தில் தான் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டாலும் 12 பேரை மட்டுமே போலீஸாா் கைது செய்தனா். தாக்குதல் நடைபெற்று 3 நாள்களாகியும் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா், இதுவரை பாதிக்கப்பட்டவா்களை சந்திக்கவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் விடுபட்ட பிரிவுகளை முதல் தகவல் அறிக்கையில் சோ்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகள், வாகனங்களின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன் பட்டியலின இளைஞா்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். அங்கு மதுக்கடைகளை மூடுவதுடன், மாநில எஸ்சி,எஸ்டி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். பட்டியலின மக்கள் குடியிருப்பில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் தீண்டாமை பாகுபாடுகளை ஒழிக்க சிறப்புக் குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.