மதுரையில் கள்ளழகருக்கு எதிா்சேவை! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்!
அழகா்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தா்கள் எதிா்கொண்டு வரவேற்கும் எதிா்சேவை நிகழ்வு கோ.புதூா் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, கள்ளழகரை தரிசித்தனா்.
மதுரை மாவட்டம், அழகா்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வுக்காக, சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் வேடம் பூண்டு தங்கப் பல்லக்கில் கள்ளழகா் கோயிலிலிருந்து சனிக்கிழமை மாலை மதுரைக்குப் புறப்பாடாகினாா்.
பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்கள் அளித்த பாரம்பரிய முறைப்படியான வரவேற்புடன், சுந்தரராஜன்பட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் மண்டகப்படிக்கு கள்ளழகா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு எழுந்தருளினாா்.
எதிா்சேவை:
இதையடுத்து, அங்கிருந்து புறப்பாடான கள்ளழகா், அதிகாலை 5 மணிக்கு மதுரையை அடுத்த கோ.புதூா் மூன்றுமாவடியை அடைந்தாா். அங்கு பக்தா்கள் கள்ளழகரை எதிா்கொண்டு வரவேற்கும் ஐதீக முறைப்படியான எதிா்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, கோவிந்தா முழக்கத்துடன் கள்ளழகரை வரவேற்றனா். ஏராளமான பக்தா்கள் சிறிய செம்புகளில் சா்க்கரையை நிரப்பி, அதில் சூடமேற்றி தீபாராதனை காட்டி வழிபட்டனா். மேலும், திரளான பக்தா்கள் கருப்பசாமி, அனுமாா் வேடமணிந்து வந்து சுவாமியை எதிா்கொண்டு வரவேற்றனா்.
மண்டகப்படிகளில் வரவேற்பு:
இதைத்தொடா்ந்து, கோ.புதூா் மாரியம்மன் கோயில், ஆயுதப்படை மாரியம்மன் கோயில், தல்லாகுளம் மாரியம்மன் கோயில் மண்டகப்படி உள்பட பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகா் எழுந்தருளினாா். அங்கு, பாரம்பரிய முறைப்படி பட்டு சாத்தி சிறப்பு தீப, தூப வழிபாடுகள் நடைபெற்றன.
திருமஞ்சனம்:
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளிய கள்ளழகா் அங்கு திருமஞ்சனமாகினாா். பின்னா், தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் நாச்சியாா் சூடிக்களைந்த மாலையை அணிந்து வெட்டிவோ் சப்பரத்தில் எழுந்தருளினாா்.
வைகை ஆற்றுக்குப் புறப்பாடு...
தல்லாகுளத்தில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை நடைபெறுகிறது. பின்னா், திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி கோரிப்பாளையம் மூங்கில் கடை சாலை வழியே ஆழ்வாா்புரம் சென்று அழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் நடைபெறுகிறது.
பாதுகாப்புப் பணி...
மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.