Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இதில், டி20 தொடரில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சல்மான் அகாவை கேப்டனாகவும், சதாப் கானை திடீரென அணிக்குள் சேர்த்து துணைக் கேப்டனாகவும் நியமித்திருக்கிறார்கள்.

இவ்வாறிருக்க, திடீரென சதாப் கானை சேர்த்து, துணைக் கேப்டனாக நியமித்ததற்கெதிராக கேள்வியெழுப்பியிருக்கும் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி, தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருப்பதாக விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய சாகித் அப்ரிடி, "எதன் அடிப்படையில் சதாப் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்? உள்நாட்டு கிரிக்கெட்டில் சதாப் கானின் செயல்திறன் என்ன? அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் காரணங்கள் என்ன? நாம் எப்போதும் போட்டிக்குத் தயாராவது குறித்து பேசுகிறோம். தோல்வியடையும்போது அதிலிருந்து மீள்வது பற்றி பேசுகிறோம். ஆனால், உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தவறான முடிவுகளால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது.
வாரியத்தின் முடிவுகளிலும் கொள்கைகளிலும் நிலையான தன்மை இல்லை. கேப்டன்கள், பயிற்சியாளர்கள் அல்லது சில வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். கிரிக்கெட் வாரிய அதிகாரிகளின் வேலைதான் என்ன? தங்களின் இடத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வீரர்கள் மீது பயிற்சியாளர்களும், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மீது நிர்வாகமும் பழிபோடுவது வருத்தமளிக்கிறது." என்று கூறினார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி பற்றி பேசிய சாகித் அப்ரிடி, `பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மொசின் நல்லது செய்ய விரும்புகிறார். ஆனால், இறுதியில் அவர் ஆலோசனைகளை மட்டுமே நம்பியிருக்கிறார். ஒரே நேரத்தில் மூன்று வேலைகளைச் செய்ய முடியாது என்று அவரிடம் ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். ஏனெனில், கிரிக்கெட் வாரிய தலைவராக இருப்பது முழுநேர வேலை. எனவே, அவர் அந்த ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
