பண்டைய காலத்தில் கோதுமையை வைத்து கண்டறியப்பட்ட கர்ப்பம்; எப்படி நடந்தது இந்த சோத...
PMK: "என் எதிரிகளை விட அசிங்கமான வேலையைச் செய்கிறார்" - அன்புமணியுடனான பிரச்னையை விவரிக்கும் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகம் விவகாரத்தில் பல மாதங்களாக மோதல் நிலவிவருகிறது.
இத்தகைய சூழலில் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஐயா என்று அழைத்த வாயை இன்று ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி!
செய்தியாளர்களிடம் பேசுகையில் ராமதாஸ், "அன்புமணி நிறைய பொய்களைத் தொண்டர்களிடத்தில் பரப்பி வருகிறார்.
அவர் தைலாபுரம் வந்து என்னைப் பார்த்ததாகவும், நான் பேச மறுத்ததாகவும் கூறிவருகிறார். நான் ஏன் பேச மறக்கப்போகிறேன்.
கட்சிக்கு 34 துணை அமைப்புகளை நான் உருவாக்கியிருக்கிறேன். அவற்றுக்குத் தனித் தனி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் காசு கொடுத்து வலித்துப்போட்டு எனக்கு எதிராக இருக்கச் சொல்கிறார்.

வேறொரு கட்சியிலிருந்து இங்க வந்த வழக்கறிஞர் ஒருவர் என்னை ராமதாஸ் என்று அழைக்கிறார். ஐயா என்று அழைத்த வாயை இன்று ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி.
கட்சியிடம் தேர்தல் ஆணைய அங்கீகாரமும் இல்லை, சின்னமும் இல்லை என்பதால் தேர்தலில் அதை மீட்டெடுப்பது, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் நியமனம் போன்றவற்றில் நிறுவனர் என்ற முறையில் நான் வழிநடத்த முடிவுசெய்தேன்.
அன்புமணி பிடிவாதம் செய்வதுதான் பிரச்னை
ஆனால், `நீங்கள் முடிவெடுக்க முடியாது, கூட்டணியை நான்தான் முடிவுசெய்வேன், வேட்பாளரை நான்தான் நியமனம் செய்வேன்' என்று அன்புமணி பிடிவாதம் செய்வதுதான் பிரச்சனை.
நான் உருவாக்கிய கட்சியில் நான் முடிவெடுக்கக் கூடாது என்று என்னை நிர்பந்தம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
தன்னிடம் கட்சியைக் கொடுக்க வேண்டும் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவரின் தலைவர் பதவி ஜூன் மாதத்தோடு காலாவதியாகிவிட்டது. இப்போது கட்சியின் தலைவரும், நிறுவனரும் நான்தான்.
அவருக்கு செயல் தலைவர் பதவி கொடுத்து, மக்களைச் சந்திக்கச் சொன்னால், நான்தான் தலைவர் என ஏதோதோ செய்கிறார்.
என் மேல் உயிரை வைத்திருந்த பலரைப் பணத்தை வைத்து தன்பக்கம் இழுத்துக் கொண்டார். வாய்கூசாமல் நிறைய பொய்களை சொல்கிறார்.
அன்புமணிக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை
அன்புமணியை தருமபுரியில் எம்.பி ஆக்கியதிலிருந்து எனக்குத் தெரியாமல் கட்சிப் பொறுப்பாளர்களை தன் பக்கம் இழுப்பதற்கான உள்ளடி வேலைகளைச் அவர் செய்திருக்கிறார் என்பதைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிந்துகொண்டேன்.
மாவட்ட செயலாளர்களை ஆலோசனைக்கு அழைத்தபோது 108 பேரில் 8 பேர்தான் வந்தார்கள்.
46 வருஷமாக 96,000 கிராமங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். ஒரு விதையை விதைத்து என் வியர்வை ஊற்றி ஆலமரமாக்கியிருக்கிறேன்.
இன்றைக்கு அதே ஆலமரத்திலிருந்து ஒரு கிளையை வெட்டிக் கோடாரி செய்து ஆலமரத்தை வெட்டப் பார்க்கிறார்.

நான் வளர்த்த கட்சியை நானே அழிக்கக்கூடாது என்பதற்காக மட்டுமல்லாமல், கட்சித் தொண்டர்களை அவர் பாதாளத்தில் தள்ளிவிடுவார் என்பதால்தான் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வில்லை.
அவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஏற்காடு மான்ட்ஃபோர்ட் ஸ்கூலில் படிக்க வைத்தேன். மத்திய அமைச்சராக்கினோம், ராஜ்ய சபா எம்.பியாக்கினோம், கட்சித் தலைவராக்கினோம்.
ஆனால், இன்று காசு கொடுத்து கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்குகிறார். வீட்டுக்குள் பேசவேண்டியதைப் பொதுவெளியில் பேசுகிறார் எனக் கட்சிக்காரர்களின் அனுதாபத்துக்காக அன்புமணி அழுகிறார்.
என்னுடைய எதிரிகள்கூட என்மீது கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை. ஆனால், அன்புமணி அமைதியாக இருந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் அசிங்கமான வேலைகளைச் செய்துவருகிறார்.
கட்சி இரண்டாக இருப்பது போன்ற பிரமையை அவரே உருவாக்கியிருக்கிறார். கட்சி இரண்டாக இல்லை ஒன்றாகத்தான் இருக்கிறது.

தைலாபுரம் தோட்டத்தில்தான் கட்சி இருக்கிறது. 50 பேராக இருந்த எனது குடும்பம் 10 பேராக சுருங்கிடுச்சி.
பொங்கல் விழா முன்பு மாதிரி கொண்டாட முடியவில்லை. பணம் பத்து செய்யும்தான். ஆனால், என் விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது.
அன்புமணி சொன்ன பொய்களை நம்பிச் சென்ற மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் என்னிடம் திரும்பி வரவேண்டும். அப்படி வரும்போது பாசத்தோடு அரவணைத்துக் கொள்வேன்." என்று கூறினார்.