Maareesan: "அத்தருணத்தில் தான் ஒரு அற்புதமான நடிகர் என்பதைக் காட்டினார்" - வடிவே...
PMK: `நான் சொல்வது தான் நடக்கும்' - மகன் அன்புமணிக்கு பதிலளித்த தந்தை ராமதாஸ் - என்னப் பேசினார்?
கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் நீட்சியாக இருவரும் தனித் தனிப் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
அதில் அன்புமணி கடந்த 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி முடித்துவிட்டார். அதில், ``எங்கள் வழிகாட்டி ஐயா தான். அவருக்காக எப்போதும் இங்கு ஒரு இருக்கை தயாராக இருக்கிறது. அவர் இங்கு வருவார் என நம்புகிறேன். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விரைவில் பா.ம.க யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன்" எனப் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நேற்று பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது. அதற்கு உதாரணம், பெரியகோவிலும். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் கோவிலும் தான்,' என்றார். இது அருமையான வார்த்தை. சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். அப்படி செய்தால், தமிழகத்தில் இருக்கும் 320 சமுதாயங்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு என் அருமை நண்பர் கருணாநிதி கொடுத்தார். 108 சமுதாயங்கள் பயன்பெற்றன. இப்போது, தந்தையை மிஞ்சிய தனயனாக நீங்கள், இந்த சாதி வாரி கணக்கெடுப்பை ஏன் எடுக்கக் கூடாது? பக்கத்து மாநிலங்கள் இந்தக் கணக்கெடுப்பை எடுத்துள்ளார்கள். உங்களுக்கு ஏன் தயக்கம்? சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இந்த சமூக சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

10.5 இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே அதிரும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். எங்களை அந்த அளவுக்கு கொண்டு செல்லாதீர்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வது தான் நடக்கும்." என உறுதியான குரலில் பேசினார்.