தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
PMK: "நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி" - ராமதாஸ் தரப்பு மனு தள்ளுபடி ஆனது குறித்து அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
இதனால், அன்புமணி அறிவித்திருக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்குமாறு ராமதாஸ் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தனது அறையில் நேரில் ஆஜராகுமாறு கூறினார்.
இதில், உடல்நிலை காரணமாக ராமதாஸ் காணொளி வாயிலாக ஆஜராக, அன்புமணி நேரில் ஆஜரானார். சுமார் ஒரு மணிநேர இந்த விசாரணை நீடித்தது.
அது முடிந்த பின்னர், ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு, அரசு தரப்பிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்து, அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவு குறித்து அன்புமணி, "இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி" என ட்வீட் செய்திருக்கிறார்.
தலைமை நிலைய செய்தி
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 8, 2025
நாளைய பொதுக்குழுவுக்கு தடையில்லை:
வாருங்கள் சொந்தங்களே.... பா.ம.க. வளர்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்போம்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக்…
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி, "சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
திட்டமிட்டபடி பா.ம.க பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11:00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளைய கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம்" என்று பதிவிட்டிருக்கிறார்.