Rahul Gandhi: ``தேச துரோகம்'' - RSS தலைவரை கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உண்மையான சுதந்திரம் ராமர் கோவில் திறப்பில்தான் கிடைத்தது என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மேலும் மோகன் பகவத் செய்தது தேச துரோகம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகம் 'இந்திரா பவன்' 9A, கோட்லா சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கட்சி தொண்டர்களிடம் உரையாடிய ராகுல் காந்தி, மோகன் பகவத்தின் கருத்துகள் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிப்பதாகவும் அரசியலமைப்பின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்றும் பேசினார்.
"ஒவ்வொரு 2,3 நாள்களுக்கும் சுதந்திர போராட்டம் மற்றும் அரசியலமைப்பைக் குறித்தும் பேசும் தைரியம் மோகன் பகவத்துக்கு இருக்கிறது. நேற்று அவர் பேசிய கருத்துகள் தேச துரோகம். ஏனெனெனில், அவர் அரசியலமைப்பும், பிரிட்டிஷுக்கு எதிரான போராட்டமும் மதிப்பற்றவை என்கிறார். இதை பொதுவெளியில் பேசும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது. இதுவே வேறொரு நாடாக இருந்தால் அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருப்பார்." என்றார் ராகுல்.
இந்த வார தொடக்கத்தில், மோகன் பகவத் இந்தியா அயோத்தியில் ராமர் கோவில் திறப்பட்ட அன்றுதான் 'உண்மையான விடுதலையை' பெற்றதாக பேசி சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் அந்த நாளை "பிரதிஷ்டா துவாதசி" என கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் 'ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அவமதித்ததாக' கூறிய ராகுல், "இந்த முட்டாள் தனத்தைக் கேட்பதை நாம் நிறுத்த வேண்டிய நேரம் இது, இவர்கள் (ஆர்.எஸ்.எஸ், பாஜக) இதேப்போல கூச்சலிட்டு கத்திக்கொண்டிருக்க முடியும் என நினைக்கின்றனர்." என்றார்.
ராகுல் காந்தி, தானும் தனது கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவை மட்டுமல்லாமல் இந்திய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டியிருப்பதாக கூறியுள்ளார்.
"நாம் நியாயமான சண்டையில் மோதவில்லை. நீங்கள் நாம் பாஜக என்ற அரசியல் இயக்கத்தையும் ஆர்.எஸ்.எஸ்-ஸையும் எதிர்த்து சண்டையிடுகிறோம் என நம்பினால் நீங்கள் நடப்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் நமது அரசின் ஒவ்வொரு சிறிய அங்கத்தையும் கைப்பற்றியுள்ளன. நாம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் இந்திய அரசையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது" என்றார்.
மேலும், "அவர்கள் இந்தியா ஒரே நபரால் ஆளப்பட வேண்டும் என நினைக்கின்றனர். நம் நாட்டின் குரலை நசுக்கிவிட நினைக்கின்றனர். இதுதான் அவர்களின் திட்டம், காங்கிரஸைத் தவிர அவர்களைத் தடுக்கும் எந்தக் கட்சியும் இந்த நாட்டில் இல்லை என்பதையும் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். காங்கிரஸால் மட்டுமே அவர்களைத் தடுக்க முடியும்." என்றார்.