மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவிடம் குரல், கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க நீதிமன்...
Retro Review: காதலுக்காக கத்தியைக் கீழே போடும் அதே `ரெட்ரோ' தமிழ் சினிமா டெம்ப்ளேட்; க்ளிக்காகிறதா?
தனது காதலி ருக்மணி (பூஜா ஹெக்டே) மீது கொண்ட காதலால் தனது கோபத்தையும், ரவுடித்தனத்தையும் விட்டுவிட்டு அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் பாரிவேல் கண்ணன் (சூர்யா).
இதனிடையே, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஒரு பொருள் ('கோல்ட் ஃபிஷ்') காணாமல் போனதாகத் தகவல் வருகிறது.
இதைத் தேடி, பாரியின் வளர்ப்புத் தந்தையான ஜோஜு ஜார்ஜ், திருமண விழாவுக்கு வருகிறார். அங்கு நடக்கும் மோதலில் பாரி மீண்டும் கத்தியைக் கையில் எடுக்க, ருக்மணி அவரை விட்டுப் பிரிகிறார்.
இதனால் சிறைக்குச் செல்லும் பாரியின் காதல் என்னவானது, 'கோல்ட் ஃபிஷ்' என்ற அந்தக் கடத்தல் பொருள் என்ன என்பதே 'ரெட்ரோ' படத்தின் கதை.

கோபத்தில் முள்ளாகக் குத்திக் கிழிக்கும் ரௌத்திர பாரியாக ஒரு புறம், காதலின் வலியை உணர்த்தும் சோகமான சாப்லினாக மறுபுறம் எனச் சூர்யா படத்தைத் தனது நடிப்பால் முழுவதுமாகத் தாங்கியிருக்கிறார்.
குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் அவரது முயற்சிகள் மிரட்டல்!
அமைதியான, தம்மத்தைப் போற்றும் பெண்ணாக பூஜா ஹெக்டே கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அவருக்கும் சூர்யாவுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி அட்டகாசம்!
வில்லனாக வரும் ஜோஜு ஜார்ஜ் பெரிதாக அச்சுறுத்தவில்லை. கிங்காக வரும் விது, சர்வாதிகாரியாக வரும் நாசர் ஆகியோர், வெறுப்பை உருவாக்கும் நடிப்பைத் தங்கள் கதாபாத்திரங்களுக்குக் கொடுத்து நியாயம் செய்கிறார்கள்.
சிரிப்பு டாக்டராக வரும் ஜெயராம், ஒரு சில காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். பிரகாஷ்ராஜ், இயக்குநர் தமிழ், கஜராஜ், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் சிறு சிறு வேடங்களில் வந்து போகிறார்கள்.
இவர்களைத் தாண்டி சிங்கம்புலி, கருணாகரன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் தெளிவற்றவையாகவே உள்ளன.

‘கனிமா’ பாடல் மூலம் 'ஒட்டுமொத்த தென் மாவட்ட'ங்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டம் ஆட வைத்த சந்தோஷ் நாராயணனின் பாடல்கள், படத்தில் பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 'ஏத்திவிடு கும்மா' பின்னணி இசையுடன் சண்டைக் காட்சிகளுக்கு உற்சாகத்தையும் ஏற்றுகின்றன.
15 நிமிடங்கள் நீளும் ஒரு சிங்கிள் டேக் காட்சியில், பாடலும் சண்டையும் ஒருங்கிணைய, அசத்தலான திரை அனுபவத்தைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.
கருந்தீவுக்குள் சென்ற பிறகு பேலட்டில் வண்ணங்களைப் பறக்க விட்டிருப்பது கலர்புல் மேஜிக். இந்த காட்சிகளைக் கோத்த விதத்தில் பிரச்னை இல்லையென்றாலும் பிற இடங்களில் படத்தொகுப்பாளர் ஷஃபிக் முகமது அலி கத்திரியை எங்கோ தொலைத்த உணர்வை ‘கட் அன் ரைட்டாக’ கொடுத்திருக்கிறார்.
அந்தமான் பகுதியில் நடக்கும் காட்சிகளில் கலை இயக்குநர்கள் ஜாக்கி, மாயபாண்டி ஆகியோர் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்த வேகத்திலேயே கதைக்குள் நுழைகிறது. காதலின் காரணமாகத்தான் அனைத்து தீய சகவாசத்தையும் விடுகிறார் என்கிற பட்சத்தில் காதல் உருவான காட்சியை இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கலாம்.

அடுத்ததாக ‘கனிமா’ பாடல் காட்சியில் வைக்கப்பட்ட டிராமா, சண்டைக் காட்சிகள் அட்டகாசமாக வேலை செய்திருக்கின்றன. ஆனால் இதன் பின்னர் எந்த விதத்திலும் உணர்வுப்பூர்வமாகக் காட்சிகளோடு ஒட்டமுடியாமல் விலகிச் செல்லத் தொடங்குகிறது திரைக்கதை.
ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கும் அந்த அத்தியாயத்தில் வரும் காட்சிகளுக்கும் சம்பந்தமில்லாத உணர்வு எட்டிப் பார்ப்பது ஏமாற்றமே!
இரண்டாம் பாதி தீவுக்குள் சுழல ஆரம்பிக்கிறது. அங்கே அவர்கள் செய்யும் சிரிப்பு வைத்தியம், ரப்பர் சண்டை ஆகியவை நாமும் அந்த சண்டை அரங்கத்துக்குள் மாட்டிக்கொண்ட உணர்வைக் கொடுத்து அயர்ச்சியாகின்றன.
அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் ஒருபுறம், குற்றவாளிகள் ஒருபுறம் என்று இரண்டாம் பாதியில் முதல் பாதிக்குச் சம்பந்தமே இல்லாத வேறொரு கதை சொல்லப்படுவது படத்தின் பெரிய மைனஸ்.
அந்த செட்டப்புக்கு நாம் பழகுவதற்குள் சுமாரான காட்சிகளின் குவியலால் படத்தின் இறுதிக்காட்சிக்கே வந்துவிடுகிறோம்.

படத்தின் தலைப்புக்கு ஏற்ப சொல்லப்பட்ட பின்கதையும் மிகவும் பழைமையான ரெட்ரோ பாணியிலான கதையாகவே இருக்கிறது.
ஜடா முனியை வைத்து பேச விரும்பிய அரசியல், ஒடுக்கப்படுகிற மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் ஓகேதான். ஆனால் அதைப் படமாக மாற்றும் திரைமொழி படத்தில் வரும் குறியீடான தேய்பிறையாகவே மாறியிருக்கிறது.
துள்ளலான இசை, சிறப்பான ஒளிப்பதிவு எனத் தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பான படமாக இருந்தாலும், கதை, திரைக்கதை ஆகிய அம்சங்கள் சறுக்குவதால் இந்த ‘ரெட்ரோ’ ஏமாற்றமே!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...