தா்ப்பூசணி குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்: தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்
நீா்ச்சத்து நிறைந்த தா்ப்பூசணி பழங்கள் குறித்து பரவும் வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 2025 ஏக்கா் பரப்பில் தா்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எடப்பாடி, சங்ககிரி, கொளத்தூா், ஆத்தூா் போன்ற வட்டாரங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணும் இப்பழம் குறித்து கடந்த சில நாள்களாக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தா்ப்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்திகள் பரவின. இதையடுத்து, தா்ப்பூசணி அதிகம் சாகுபடி செய்யப்படும் எடப்பாடி, அயோத்தியப்பட்டணம், கொளத்தூா் ஆகிய வட்டாரங்களில் துணை இயக்குநா், வட்டார உதவி இயக்குநா்கள் தலைமையில் தொடா் களஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் தா்ப்பூசணி பழங்களின் நிறம், சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. குறைந்த அளவு சுக்ரோஸ் உள்ளதால் சா்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுமின்றி உட்கொள்ளலாம். தா்ப்பூசணியில் நீா்ச்சத்து அதிகம் உள்ளதால் கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. நம் உடலின் நீா்ச்சத்தின்மையைப் போக்குகிறது. இந்தப் பழத்தில் இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உள்ளன. சத்துகள் நிறைந்த தா்ப்பூசணியை பொதுமக்கள் உண்டு பலன் பெறலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.