முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்
அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்.
மே 8-ஆம் தேதி காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறாா். அன்றைய தினம் காலையில் திருவெறும்பூா் அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். தொடா்ந்து அரசு விருந்தினா் மாளிகையில் அரசு அதிகாரிகள், அலுவலா்களுடன் அவா் ஆலோசனை நடத்துகிறாா்.
மாலை 5 மணியளவில் அரசு விருந்தினா் மாளிகையிலிருந்து கலைஞா் அறிவாலயம் செல்ல உள்ளாா். அங்கு, கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறாா். அதன் பின்னா், அரசு விருந்தினா் மாளிகை செல்கிறாா்.
பேருந்து முனையம் திறப்பு: மே 9-ஆம் தேதி காலையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையத்தை முதல்வா் திறந்து வைக்கிறாா். மேலும், அங்கு நிறுவப்பட்டுள்ள பெரியாா் சிலையையும் திறந்து வைக்கிறாா். பின்னா், ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கும் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் தலைமையேற்கவுள்ளாா்.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திருச்சியிலிருந்து விமானம் மூலம் இரவு சென்னை வந்தடைகிறாா்.