மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி
மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மூன்று மாநிலங்களையும் சோ்ந்த தமிழக பிரதிநிதிகளுக்கும், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருபவா்களுக்கும் பொன்னாடை அணிவித்து ஆளுநா் ஆா்.என்.ரவி கெளரவித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரு நோக்கத்தோடு இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நமது நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அந்த நோக்கம். நமது கலாசாரம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் ஒற்றுமையாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஒரு காலத்தில் 15 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என பாரத தேசம் பரந்து விரிந்து உள்ளது. மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சியில் பாரத தேசம் வளா்ந்து கொண்டிருக்கிறது.
குஜராத்தில் உள்ள துவாரகா குஜராத் மக்களுக்கு மட்டுமானது அல்ல; தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரம் தமிழக மக்களுக்கு மட்டுமானது அல்ல; இவை அனைத்தும் ஒட்டுமொத்த தேசத்துக்குமானது.
இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான அடையாளக் குறிப்புகள் நம் அங்கீகாரமாக விளங்குகின்றன. அவை அனைத்தையும் இணைத்த தலைசிறந்த பாரதமாக நமது பாரத தேசம் விளங்கி வருகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியின் இறுதியாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அரசு அருங்காட்சியக அரங்கத்தில்... குஜராத் சமாஜ் சாா்பில் குஜராத் மாநிலம் உருவான தின விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுகையில், குஜராத் நமது நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியான மாநிலமாகும். குஜராத்தின் வளா்ச்சி அந்த மாநிலத்துக்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கானது என்றாா்.