Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' - ரிஷப் பன்ட்
சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த சூட்டோடு மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட்டின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில், ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பாக தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில் ரிஷப் பன்ட் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த ஊடக நிகழ்ச்சியில் பேசிய ரிஷப் பண்ட், ``சிறு வயதிலிருந்தே, இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என் ஒரே கனவாக இருந்தது. ஐ.பி.எல்லில் விளையாடுவது பற்றி நான் நினைத்தது கூட இல்லை. ஆனால், இன்று பெரும்பாலானோர் ஐ.பி.எல் மீது அதிக கவனம் செல்லுவதாக நான் நினைக்கிறேன்.
நிச்சயம் இது சிறந்த தளம்தான். இருப்பினும், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது உங்களின் இலக்காக இருந்தால், ஐ.பி.எல் உட்பட அனைத்தும் அதில் வந்துவிடும் என்று நான் நம்புகிறேன். பெரிய கனவுகளை நீங்கள் கொண்டிருந்தால், வெற்றிகள் உங்களைத் தொடரும். ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் எப்போதும் நம்பினேன். 18 வயதில் அத்தகைய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது." என்று கூறினார்.

2022 டிசம்பரில் கார் விபத்துக்குள்ளாகி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ரிஷப் பண்ட், ஓராண்டுக்குப் பிறகு 2024-ல் ஐ.பி.எல்லில் கம்பேக் கொடுத்து அதே ஆண்டில் டி20 உலகக் கோப்பையிலும் விளையாடினார். மேலும், ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட், ஏலத்தில் லக்னோ அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாகவும் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
