RR vs PBKS : 'உங்கிட்ட எண்டிங் சரியில்லையேப்பா..' - ராஜஸ்தானை எப்படி வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்?
'ராஜஸ்தான் vs பஞ்சாப்!'
மீண்டும் ஐ.பி.எல் தொடங்கிய பிறகு முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருந்த பஞ்சாபும் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட ராஜஸ்தானும் மோதியிருந்தன.

ராஜஸ்தான் அணி வழக்கம்போல சிறப்பாக ஆடி டெத் ஓவர்களில் சொதப்பி போட்டியை இழந்திருக்கிறது. பஞ்சாப் அணி சில இடங்களில் சறுக்கியது. ஆனாலும் மீண்டு வந்து போட்டியை வென்று விட்டது. பஞ்சாப் எப்படி வென்றது? ராஜஸ்தான் எங்கேயெல்லாம் சொதப்பியது?
ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. முதல் 3.1 ஓவர்களில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ஓப்பனர்களான பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரின் விக்கெட்டையும் துஷார் தேஷ்பாண்டே வீழ்த்தியிருந்தார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து மிட்செல் ஓவன்ஸ் என்கிற வீரரை மாற்று வீரராக பஞ்சாப் அணி அழைத்து வந்திருந்தது. அவர் நம்பர் 3 இல் இறங்கியிருந்தார். ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார். கடைசியாக நடந்த பிக்பேஸ் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர் இந்த ஓவன்ஸ்தான். பெரிய நம்பிக்கையோடு இறக்கியிருந்தனர். அவர் வந்த வேகத்திலேயே பேட்டை சுழற்ற பார்த்து அவுட் ஆனார்.
மபாகா ஒரு ஸ்லோயர் ஒன்னில் அவரை வீழ்த்தினார். தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் பஞ்சாபின் வேகம் எங்கும் தடைபடவில்லை.

'சரிவிலிருந்து மீட்ட வதேரா!'
ஸ்ரேயாஸ் ஐயரும் நேஹல் வதேராவும் கூட்டணி சேர்ந்தார்கள். வதேராதான் இந்தப் போட்டியின் ஸ்டார். ஸ்ரேயாஷ் ஐயர் 30 ரன்களை ரியான் பராக்கின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆனார். இது ஸ்ரேயாஷூக்கு விரிக்கப்பட்ட வலை. பார்ட்னர்ஷிப் செட் ஆகிறது என்றவுடன், வேண்டுமென்றே ரியான் பராக்குக்கு ஓவரை கொடுத்து ஸ்ரேயாஸை கூடுதல் ரிஸ்க் எடுத்து ஆட வைத்தார் சாம்சன்.

அதற்கு பலனும் கிடைத்தது. விக்கெட்டுகள் விழுந்தாலும் பஞ்சாப் அணி சீரான ரன்ரேட்டில் முன்னேறிக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம் நேஹல் வதேரா, எங்கேயும் தடுமாறாமல் சீராக ஆட்டத்தை எடுத்துச் சென்றார். லெக் சைடில் மடக்கி மடக்கி ஷாட்களை ஆடி பிரமாதப்படுத்தினார். நல்ல டச்சில் இருந்தார். 25 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அந்த சமயத்தில் மட்டும் 96% டெலிவரிக்களை சரியாக மிடில் பேட்டில் ஆடியிருந்தார்.
'அதிரடியாக முடித்த சஷாஙக்!'
வதேராவால் தான் மிடில் ஓவர்களில் பஞ்சாப் திணறவில்லை. 7-15 மிடில் ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 89 ரன்களை பஞ்சாப் எடுத்திருந்தது. 70 ரன்களில் ஆகாஷ் மத்வாலின் பந்தில் வதேரா அவுட் ஆனார். டெத் ஓவர்களை. சஷாங் சிங் பார்த்துக் கொண்டார். அவர் வழக்கம்போல உத்வேகமான இன்னிங்ஸை ஆடி அரைசதத்தைக் கடந்தார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்களை எடுத்தது.

'அதிரடியாக தொடங்கிய ராஜஸ்தான்!'
ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் டார்கெட். பெரிய இலக்கு என்பதால் ராஜஸ்தான் அணி அதிரடியாகவே தொடங்கியது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே 22 ரன்களை விளாசினார் ஜெய்ஸ்வால். வைபவ் சூர்யவன்ஷியும் இன்னொரு பக்கம் அட்டாக்கிங்காகத்தான் ஆடினார். முதல் 3 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 51 ரன்களை எடுத்துவிட்டது.
'கேம் சேஞ்சர் ப்ரார்!'
ராஜஸ்தான் ஆரம்பித்த வேகத்துக்கு சில ஓவர்களை மீதம் வைத்து வெல்லுமோ என தோன்றியது. இங்கேதான் ஹர்ப்ரீத் ப்ரார் ட்விஸ்ட் கொடுத்தார். இரண்டு இடதுகை பேட்டர்கள் ஆடிக்கொண்டிருந்தாலும் அந்த சமயத்தில் துணிச்சலாக இடதுகை ஸ்பின்னரான ப்ராருக்கு ஓவர் கொடுத்தனர். சூர்யவன்ஷி இரண்டு பவுண்டரிக்கள் அடித்தாலும் அடுத்த பந்திலேயே கேட்ச் ஆகி அவுட்டும் ஆனார்.

ப்ரார்தான் கேம் சேஞ்சராக இருந்தார். அரைசதத்தை கடந்திருந்த ஜெய்ஸ்வாலின் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். ரியான் பராக்கின் விக்கெட்டையும் எடுத்தார். 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ராஜஸ்தான் அணி ஆரம்பித்த வேகத்துக்கும் அவர்கள் சேஸை முன்னெடுத்து சென்ற வேகத்துக்கும் வென்றிருக்க வேண்டும். ஆனால், இந்த சீசனில் ராஜஸ்தானால் சேஸிங்கில் சிறப்பாக செயல்படவே முடியவில்லை.
'சேஸிங்கில் சொதப்பும் ராஜஸ்தான்!'
இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் சேஸ் செய்திருக்கின்றனர். அதில் 8 போட்டிகளில் தோற்றிருக்கின்றனர். பெரும்பாலான போட்டிகளில் இலக்கை ரொம்பவே நெருங்கி வந்தே கோட்டை விட்டனர். இந்தப் போட்டியிலும் அப்படியே. கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் தேவை. துருவ் ஜூரேலும் ஹெட்மயரும் களத்தில் நின்றனர்.

துருவ் ஜூரேல் இயன்றளவுக்கு அதிரடியாக ஆடி போட்டியை உயிர்ப்போடு கொண்டு சென்றார். ஆனால், இன்னொரு பக்கம் ஹெட்மயர் வழக்கம்போல சொதப்பி 12 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து அஷ்மத்துல்லா ஒமர்சாயின் பந்தில் அவுட் ஆகினார். ராஜஸ்தான் சேஸிங்கில் சொதப்ப பினிஷர் ரோலில் சொதப்பி வரும் ஹெட்மயர்தான் மிக முக்கிய காரணம். இறுதியாக பஞ்சாப் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பஞ்சாப் அணி 17 புள்ளிகளை பெற்றுவிட்டது. ஆர்சிபி ஏற்கனவே 17 புள்ளிகளில் இருக்கிறது. ஆனால், இன்னமும் எந்த அணியும் ப்ளே ஆப்ஸூக்கு முன்னேறவில்லை. இதுதான் இந்த சீசனின் வினோதம்.