Salman Khan: `முதுகில் குத்தப்பட்டு துரோகத்தை உணரும்போது' - மருமகனிடம் நெகிழ்ந்த சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரி மகன் அர்ஹானும், அவரின் நண்பர்கள் அருஷ் மற்றும் தேவ் ஆகியோர் இணைந்து தம் பிரியாணி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இச்சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சல்மான் கான் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,'' பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்காமல் விரைவில் அதில் இருந்து வெளியில் வந்துவிடவேண்டும். எப்போதும் தவறு செய்தால் அதனை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பது அவசியம். 'நன்றி' மற்றும் 'மன்னிக்கவும்' போன்ற வார்த்தைகள் தானாக வர வேண்டும்''என்று தெரிவித்தார். சல்மான் கான் அர்ஹான் கானை தனது இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஊக்குவித்தார். "ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினால், என்ன நடந்தாலும் அதில் கவனம் செலுத்துங்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/bu9r8hg7/salmanstory-650040618055121.jpg)
நீங்கள் காயமடைந்தாலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், போதுமான அளவு தூங்கவில்லை என்றாலும், அதைச் செய்யுங்கள். வெவ்வேறு நபர்களைக் கையாளும்போது அவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம். காரணம் இல்லாமல் யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. நீங்கள் மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம். மரியாதை இல்லாத இடத்தில், நீங்கள் இருக்கக்கூடாது''என்று தெரிவித்தார்.
உறவில் துரோகம் குறித்துப் பேசிய சல்மான் கான், ``துரோகம் செய்திருப்பது தெரியவந்தால் உடனே அதிலிருந்து வெளியில் வந்துவிடவேண்டும். ஒரு உறவில் ஈடுபட்டிருக்கும்போது அந்த நபருடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் 40 முதல் 50 ஆண்டுகள் அவருடன் கழித்திருக்கலாம். நீங்கள் முதுகில் குத்தப்பட்டு இருப்பதாக உணரும்போது அதில் இருந்து 30 நொடிகளில் வெளியில் வர உங்களுக்கு சக்தி வேண்டும். அதிலிருந்து வெளியில் வந்துவிடுங்கள். நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் சுவர்கள், மரங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குரு சொல்வதையும் கேளுங்கள். நான் வழக்கமாக சில மணி நேரம் உறங்குவதுண்டு. மாதத்தில் ஒரு முறை 7 அல்லது 8 மணி நேரம் உறங்க வாய்ப்பு கிடைக்கும். படப்பிடிப்பின் போது ஓய்வு கிடைத்தால் சிறிது நேரம் உறங்குவதுண்டு. நான் சிறையில் இருந்தபோது நன்றாக உறங்கினேன். விமானத்திலும் நன்றாக உறங்குவதுண்டு''என்று தெரிவித்தார்.