Shardul Thakur : 'Unsold டு பர்ப்பிள் தொப்பி' - மாஸ் காட்டிய ஷர்துல் தாக்கூர்
'ஷர்துல் தாக்கூரின் கம்பேக்!'
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கி 200+ ஸ்கோர்களை அசால்ட்டாக எடுக்கும் சன்ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியில் 190 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. லக்னோ அணி மிகச்சிறப்பாக பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை கட்டுப்படுத்தியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஷர்துல் தாகூர் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். ஐ.பி.எல் இல் அவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு இதுதான். ஷர்துல் தாகூர் மெகா ஏலத்தில் 'Unsold' ஆகியிருந்தார். எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. லக்னோ அணியில் மோஷின் கான் திடீரென காயமடைய அந்த அணி ரீப்ளேஸ்மெண்ட் வீரராக ஷர்துல் தாகூரை அணிக்குள் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்
இன்னிங்ஸ் இடைவேளையில் பேசிய ஷர்துல் தாகூர், 'இதெல்லாம் கிரிக்கெட்டில் நடக்கத்தான் செய்யும். ஏல நாளன்று அது எனக்கான நாளாக இல்லை. எந்த அணியும் என்னை எடுக்கவில்லை. லக்னோ அணியில் சில வீரர்கள் காயமடைந்ததால் என்னை தொடர்புகொண்டார்கள். ஜாகீர் கானுடன் இணைந்து பயணிப்பதும் நல்ல அனுபவமாக இருக்கிறது.

எல்லாருக்கும் திறமை இருக்கும். ஃபார்மும் குறிப்பிட்ட அந்த நாளும் நமக்கானதாக இருக்கிறதா என்பதே முக்கியம். சன்ரைசர்ஸ் பேட்டர்கள் பௌலர்களுக்கு எதிராக தீவிரமான அணுகுமுறையை கடைபிடிக்கும்போது, பௌலர்களும் ஏன் அவர்களின் மீது தீவிரமான அணுகுமுறையை கடைபிடிக்கக்கூடாது என்பதுதான் எங்களின் கேள்வியாக இருந்தது. அதற்கேற்ற வகையில்தான் நாங்களும் திட்டம் தீட்டினோம்.' என்றார்.
ஷர்துல் இந்த சீசனில் இதுவரைக்கும் 6 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். இப்போதைக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான பர்ப்பிள் தொப்பி அவரிடம்தான் இருக்கிறது.