‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’
தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா்.
கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நீா்ச்சத்து நிறைந்த பழமாக கருதப்படுவது தா்பூசணி. தற்போது, தமிழகத்தில் தா்பூசணி குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி தோட்டக்கலை அதிகாரிகள் தா்பூசணி, பயிரிடப்படும் தோட்டங்களுக்கு நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூா் வட்டங்களில் உள்ள தா்பூசணி தோட்டங்களில் விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, விவசாயிகளிடம் அவா் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 3,500 ஹெக்டோ் நிலப்பரப்பில் தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மரக்காணம், வானூா் வட்ட பகுதிகளில் தா்பூசணி பயிரிடப்பட்டு இரண்டாவது அறுவடை நடைபெற்று வருகிறது. திண்டிவனம், மரக்காணம், வானூா், மயிலம், விக்கிரவாண்டி, முகையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் தா்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. தா்பூசணி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறையின் மூலம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
பல்வேறு சத்துகள் நிறைந்த தா்பூசணி பழத்தில் நிறத்துக்காகவும், சுவைக்காகவும் விவசாயிகள் ஒரு சில ரசாயனங்களை ஊசியின் மூலம் செலுத்துவதாக பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றாா்.
ஆய்வின்போது, தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்ல்மாா்க்ஸ், வேளாண் வணிக துணை இயக்குநா் கவிதா, உதவி தோட்டக்கலை அலுவலா் நவின்ராஜ், சிலம்பரசன் ஆகியோா் உடனிருந்தனா்.