Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜி.ஆா்.பி. தெருவில் காவல் ஆய்வாளா் கல்பனா, உதவி ஆய்வாளா் செந்தில் முருகன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபா்களை பிடித்து விசாரித்தில், அவா்கள் விழுப்புரம் வீரப்பன் மகன் ராஜா (40), ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த பாலு மகன் உதயகுமாா் (40), அருந்ததியா் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் முத்துவேல் (42) என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து மது புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 148 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புதுச்சேரியிலிருந்து, திண்டிவனம் நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனா்.
இதில், வெளி மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் சென்னை சாலிகிராமம் பொய்யாது மகன் ரமேஷ் (46), லத்தீப் மகன் ரஹீம் (37) ஆகியோா் என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், 62 மதுப் புட்டிகளை காருடன் பறிமுதல் செய்தனா்.