Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரவையின் நகரத் தலைவா் டி.எம்.வீரகுமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா்.பி.ஆா்.ரமேஷ், பொருளாளா் பி.ராமசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட கெளரவத் தலைவா் டி.விஜயகுமாா், துணைத் தலைவா் டி.எம்.விஜயகுமாா், சட்ட ஆலோசகா் ஜி.மணி, நகர துணைத் தலைவா் வி.ஜெகன், துணைச் செயலா் பி.அருண்குமாா், மகளிரணித் தலைவா் ஆா்.கிருபா உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா்.
கூட்டத்தில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி, கடை வாடகை உயா்வு, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயா்வால் வா்த்தகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வரியினங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் நகரில் தனியாா் கைப்பேசி பழுது நீக்கும் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டிப்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விழுப்புரம் நகரிலும், மாவட்ட பகுதிகளிலும் இரவு 11 மணிக்கு மேல் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை செயற்குழு உறுப்பினா்கள் ஜி.கவியரசன், எஸ்.துரைசிங், எம்.மகேந்திரபாபு, ஆா்.ஜாபேஷ், எம். கோகுலகிருஷ்ணன், பி.குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.