Shreyas Iyer: "கோப்பை வென்ற பிறகும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை" - ஸ்ரேயஸ் வேதனை
இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், 2024-ல் ஐ.பி.எல் உட்பட உள்ளூர் கிரிக்கெட்டில் அனைத்துக் கோப்பைகளையும் வென்று ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார். அவரின் இம்பேக்ட் தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பை வென்றதிலும் பிரதிபலித்தது.

இந்தத் தொடரில், அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் 243 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதில், இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்தவரும் இவரே. இதைத்தொடர்ந்து, அடுத்தவாரம் தொடங்கும் ஐ.பி.எல்லில் பஞ்சாப் அணிக்கு முதல் கோப்பையை வென்று தர கேப்டனாக ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்கு மூன்றாவது டிராபியை வென்று கொடுத்தபோதும் அதற்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய ஸ்ரேயஸ் ஐயர், ``2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட சமயத்தில் என் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன். எந்த இடத்தில் தவறு செய்தேன், அடுத்து என்ன செய்ய வேண்டும், உடற்தகுதியில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்ற கேள்விகளை எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். பின்னர், எனது பயிற்சி, திறமைகளில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான போட்டிகள் கிடைத்ததும், உடற்தகுதி எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் கண்டுபிடித்தேன். இத்தகைய சூழலிலிருந்து நன் வெளியே வந்தது, அதைக் கையாண்ட விதம் மற்றும் முக்கியமாக என்னை நம்பியது என இப்போது என்னைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்று கூறினார்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் தான் விரக்தியடைந்த தருணம் குறித்துப் பேசிய ஸ்ரேயஸ் ஐயர், ``ஐ.பி.எல் கோப்பை வென்ற பிறகு எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதைத் தனிப்பட்ட முறையில் நான் உணர்ந்தேன். அங்கீகாரம் என்பது மரியாதையைப் பெறுவது. களத்தில் நான் எடுக்கும் முடிவுகளைப் பற்றியது. சில நேரங்களில் அது கவனிக்கப்படாமல் போகிறது. இருப்பினும், நான் செய்த முயற்சிகள் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்." எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்தில், கழற்றிவிட்ட கொல்கத்தா அணி உட்பட அனைவரையும் சர்ப்ரைஸ் செய்யும் விதமாக, ஸ்ரேயஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.