Shreyas Iyer: ``சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வானால் அதுவே எனக்கு..." - நெகிழும் ஸ்ரேயஸ் ஐயர்
இந்திய கிரிக்கெட் வீரர்களில் 2024-ம் ஆண்டு யாருக்கு சிறப்பாக முடிந்ததோ இல்லையோ ஷ்ரேயஸ் ஐயருக்கு சிறப்பாக அமைந்தது. ஐ.பி.எல் கோப்பை, ரஞ்சி டிராபி, சையது முஷ்டாக் அலி டிராபி ஆகிய மூன்று கோப்பைகளை கேப்டனாகவும், இரானி கோப்பையை ஒரு வீரராகவும் வென்றிருக்கிறார். அதோடு, ஐ.பி.எல் ஏலத்தில் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
மேலும் அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். நடப்பு விஜய் ஹசாரே டிராபியிலும் ஐந்து ஆட்டங்களில் இரண்டு சதங்கள் உட்பட 325 ரன்கள் அடித்திருக்கிறார். அப்படியிருந்தும், அடுத்த வாரம் இந்தியாவில் தொடங்கும் இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடருக்கான அணியில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறவில்லை. இருப்பினும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்குமா என்பது விவாதப்பொருளாக இருக்கிறது.
காரணம் , கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு முழங்கால் அறுவை சிகிச்சையால் ஒரு சர்வதேச மேட்ச் ஆடாத ஷமியை, சாம்பியன்ஸ் டிராபிக்கு தயார் செய்யும் வகையில் இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மறுபக்கம், அதே உலகக் கோப்பையில் 530 ரன்கள் அடித்த, அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் இத்தனை கோப்பைகளை வென்ற ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெருமையான தருணமாக இருக்கும் என்று ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்திருக்கிறார்.
ESPNCricinfo என்ற ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த ஷ்ரேயஸ் ஐயர், ``எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய நான் தயாராக இருக்கிறேன். கடந்த உலகக் கோப்பையில் நானும், கே.எல்.ராகுலும் மிடிலில் முக்கிய பங்காற்றினோம். எங்களுக்குச் சிறப்பான சீசனாக அமைந்தது.
இருப்பினும், இறுதிப் போட்டியில் நாங்கள் நினைத்ததைச் செயல்படுத்த முடியவில்லை. எனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாட்டைப் பிரதிநிதிவப்படுத்தும் வகையில் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது எனக்கு ஒரு பெருமையான தருணமாக இருக்கும்." என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவாரா என்பது குறித்து உங்கள் கருத்துகளைக் கமெண்ட்டில் பதிவிடவும்.