இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
'StartUp' சாகசம் 17 : `அம்மா உதவியுடன் தாவர நிறமேற்றிகள்’ - நெல்லை இளைஞரின் `Gusteau Foods’ கதை
உணவுப் பொருட்களில் வண்ணங்கள் சேர்ப்பது என்பது இன்று ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. உணவுப் பொருட்களை கவர்ச்சிகரமாக மாற்றுவதிலும், விற்பனையைப் பெருக்குவதிலும் உணவு வண்ணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட உணவுப் பொருட்களில் இது முக்கியமாக சேர்க்கப்பட்டு நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கின்றன. விற்பனையை அதிகரிக்க உதவுகின்றன.
ஆனால் சில செயற்கை உணவு வண்ணங்கள் ஒவ்வாமை, hyperactivity போன்ற உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். நீண்டகால பயன்பாட்டின் அடிப்படையில் சிலருக்கு கேன்சரே வரும் அபாயம் உள்ளது, அதுமட்டுமல்லாமல் சிலருக்கு சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் பற்றிய தகவல்களை லேபிள்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தாலும், நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு அவசியமாகிறது.

அமிலேட் மஞ்சள் (Allura Red), டார்ட்ராசைன் (Tartrazine), இரித்ரொசைன் (Erythrosine), பிரில்லியண்ட் பிளூ (Brilliant Blue) ஆகிய நிறமூட்டிகள் பொதுவாக பயன்படுத்துகிறது. ஆனால் இவைகள் நீண்டகாலம் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு நிறைய சிக்கல்களை உருவாக்குகிறது என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில்தான் திருநெல்வேலி இளைஞர் கார்த்திக் சுந்தரம், சென்னையில் ஒரு நிறுவனம் ஆரம்பித்து தாவரத்திலிருந்து சாறு எடுத்து அந்த தாவரத்தின் சத்தும் குறையாமல் இருக்கும்படியான தாவர நிறமேற்றிகளை உருவாக்கிவருகிறார். இன்று அவருடனான நேர்காணலைத்தான் நாம் பார்க்கப்போகின்றோம்.
``கஸ்டோ புட்ஸ் (Gusteau Foods) ஆரம்பிக்கவேண்டும் என்று எண்ணம் எப்படி ஏற்பட்டது? நிறுவனமாக ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தை நோக்கி நீங்கள் எப்படி பயணித்தீர்கள்?”
``கொச்சினில் நறுமணப்பொருட்களில் இருந்து சாறு எடுக்கும் நிறுவனத்தில் 7 வருடம் பணணியாற்றினேன். கொரோனா வந்தது எல்லாரையும்போல நானும் ஊருக்கு வந்தேன். கொரோனா காலத்தில்தான் எல்லாரும் ஆரோக்கியத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அக்கறை எடுத்துக்கொண்டார்கள். அந்நேரத்தில்தான் நானும் வீட்டில் இருந்தேன்.
என் அம்மா பேக்கரி உணவுப்பொருட்களை வீட்டிலயே செய்வார்கள். குறிப்பாக கேக் போன்றவை. என் பணி சார்ந்து அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேக்களுக்கு ஏன் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தணும். நம்மிடம் உள்ள பொருட்களை வைத்து ஏன் உருவாக்கக்கூடாது என்று எனக்குத்தோன்றியது. உடனே அம்மாவுடன் இணைந்து செயல்படுத்தினோம்.

வீட்டிலிருந்த கீரை, ஆரஞ்சு தோல், பீட்ரூட், கேரட் போன்றவற்றின் சாறிலிருந்து கேக் உருவாக்கினோம். அப்போது கேக்கில் அந்த கலர் நிலையாக இருந்தது ,எந்த செயற்கை நிறமிகளும் இல்லாமல் அந்த தாவரத்தின் சுவையும் கேக்கில் இணைந்தபோது அதன் சுவை இன்னமும் நன்றாகவே இருந்து , உடனேதான் எனக்குத் தோன்றியது ஏன் காய்கறியிலிருந்து நிறமூட்டிகளை உருவாக்கக்கூடாது என்று.
காய்கறி பறித்த ஒரு நாளுக்குப் பின் அவற்றின் எடையும் குறைந்துவிடும். அவற்றின் வாழ்நாள் வெகு இறைவு, அவற்றை ஏன் இப்படி மதிப்புக் கூட்டக்கூடாது என்று தோன்றியது.
அப்படி ஆரம்பித்ததுதான் எங்கள் கஸ்டோ புட்ஸ் நிறுவனம். இன்று 7 வண்ணங்களில் நாங்கள் தாவரங்களிலிருந்து பகுப்பாய்வு செய்து அவற்றின் சாற்றை எடுத்து நாங்கள் உணவுகளுக்கான வண்ணங்களை உருவாக்குகின்றோம்.
அதேபோல் நீண்ட நாள் கெட்டுப்போகாத கிரேவி என்பது, என் பாட்டியின் ஐடியாதான், அவர்கள் வீட்டிலயே நிறைய புதிய புதிய விசயங்களை செய்து பார்ப்பார்கள். அப்படி உருவாக்கிய ஒன்றுதான் கிரேவி. அது நம் அனைவைர் வீட்டிலும் செய்யக்கூடியதுதான். என் பாட்டி உருவாக்கிய கிரேவியில் எந்த செயற்கை பொருளும் இருக்காது. அதை ஏன் நாம் உருவாக்கூடாது என்று தான் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ( CFTRI ) உதவி பெற்றோம்.
அவர்கள் இதற்கான தொழில்நுட்பம் ஏதும் கிடையாது , ஆனால் செயல்முறைகள் வழியே உருவாக்கவேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கொடுத்தனர். அப்படி ஒன்றில்தான் நாங்கள் ஒரு வழிமுறையை உருவாக்னோம். அதில் கிரேவியை உருவாக்கி அதை குறிப்பிட்ட நிலையில் வெப்பமாக்கி அவற்றை உடனே வெகுவாக குளிர்ந்த நீரில் குறிப்பிட்ட நேரம் குளிர வைத்தோம்.
குளிர்ந்த நீரில் மைக்ரோ பாக்டிரியா வளர்ச்சி பெரிதாக இருக்காது. கிரேவியில் உள்ள கலர் மாறாது. அதனால் 4 மாதம் இந்த வண்ணமும் சுவையும் மாறாது. இது இப்போது கிளவுட் கிட்சன் முறையில் செயலாற்றும் அனைவருக்கும் சிறப்பாக பொருந்துகிறது. இதனால் எங்கள் சந்தையும் விரிவடைய துவங்கியுள்ளது. இப்போது பல கிரேவிகள் செய்து வருகின்றோம்.

இதுமட்டுமல்லாமல் கூட்டுப்பண்ணையம் முறையில் வெண்ணிலா பீன்களை கேரளாவில் உற்பத்தி செய்து மதிப்புகூட்டியும் விற்பனை செய்துவருகின்றேன். அதற்கும் நல்ல சந்தை இருக்கிறது. இந்த மூன்று நிறுவனத்துக்கும் தனித்தனியாக ஆட்களை வைத்து நிர்வகிப்பதால் பணியாற்றுவதும் எளிதாக இருக்கிறது. அதோடு எங்கள் தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்கின்றோம். அகலவும் கால் வைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.”
``துவக்கத்தில் எப்படி நிதி திரட்டினீர்கள். மூன்று வணிகம் எனும்போது எப்படி சமாளித்தீர்கள். குறிப்பாக எப்போ லாப நிலையை அடைந்தீர்கள்?”
``ஆரம்பத்தில் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது எதிர்காலத்திற்கு என்று சேமித்து வைத்திருந்தேன். அந்தத்தொகையைதான் என் தொழிலுக்கு மூலதனமாக வைத்துக்கொண்டேன். முதல் வருடம் முழுவதுமே ஆராய்ச்சிக்கும் , மேம்பாட்டுக்கும் செலவிட்டோம், சொந்தமாக உற்பத்தி ஆலையை துவங்கவில்லை, மாறாக வேறு நிறுவனத்திடம் கொடுத்து எங்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்துகொண்டோம்.
சந்தைக்கான ஆய்வை செய்தோம். எந்தெந்த ஊரில் என்ன உணவுகள் ஊரின் அடையாளமாக இருக்கிறது, அந்த அடையாளமான பொருட்களை நாம் எப்படி உற்பத்தி செய்யலாம், என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை அறிந்துகொண்டோம்.
ஆச்சர்யமான விசயம் இரண்டாம் வருடத்திலேயே நாங்கள் லாபமீட்ட தொடங்கிவிட்டோம். அதனால் நிதிக்கு எங்கேயும் செல்லவில்லை, கையிருப்பு கரைவதற்குள் நாங்கள் லாபமீட்ட துவங்கவேண்டும் என்பது எங்கள் இலக்கு. அதை அடைந்துவிட்டோம்.”
``எத்தனை பொருட்கள் இப்போது தயாரித்த வருகிறீர்கள்?”
``தாவர நிறமூட்டிகளில் பச்சை, ஆரஞ்ச், நீலம், காப்பி கலர் , பழுப்பு, கருப்பு , மஞ்சள் ஆகிய நிறமூட்டிகள் தயாரித்து வருகின்றோம். இதை ஐஸ்கீரீம், இனிப்புகள், எல்லா பேக்கரி தயாரிப்புகள், சாக்லேட்களுக்கும், குச்சி மிட்டாய்களுக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக சிக்கன் 65, தந்தூரி போன்வற்றிலும் பயன்படுத்தலாம். இது நிச்சயம் உடல்நலனை பாதிக்காது. ஏனனில் ரோஸ்மேரி எங்களின் பிரதான மூலப்பொருள், இதை எந்த கெமிக்கலிலும் சேர்க்காமல் தண்ணிரைக்கொண்டு உருவாக்கிவருவதால் ஆதன் ஆன்டாக்சிடெண்ட் மாறாது.
அதேபோன்று கிரேவி பேஸ்ட்.
பாய் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, மெட்ராஸ் மீன்கரி , மதுரை சுக்கா மசாலா மற்றும் தென்னிந்திய கறி பேஸ்ட் ஆகிய கிரேவிக்களை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றோம். இவற்றை அரிசி , சிக்கன் அல்லது ஆட்டுக்கறி மற்றும் சிறிதளவு உப்பு, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை போட்டுவிட்டு பின் நம்முடைய கஸ்டோ புட்சின் கிரேவியை கலந்து விசில் வந்தபின் இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த பிரியாணி ரெடி.
வெண்ணீலாபீன்களை ஐஸ்கிரிம் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றோம்.”
``நீங்கள் தொழில் துவங்கிய இத்தனை வருடங்களில் நீங்கள் சந்தித்த சிக்கல் என்ன?”
``இது உணவுப்பொருட்கள் என்பதால் இவற்றை சரியாக நிர்வகிக்கவேண்டும். உற்பத்திக்கும், விற்பனைக்கும், விநியோகத்திற்கும் சரி சமமாக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எனவே கோயம்புத்தூரில் எங்கள் உற்பத்தி மையத்தை அமைத்தோம். சென்னையில் விநியோக மையத்தை அமைத்துக்கொண்டோம். இதைவைத்து எங்கள் பொருட்களை எங்களின் வாடிக்கையாளருக்கு விநியோகிக்கிறோம். இவைதான் சவாலாக இருந்தது. ஆனால் இதை சரியாக திட்டமிட்டு இப்போது செயல்படுத்திவருகின்றோம்.

எதிர்கால திட்டம்
``எங்கள் தாவர நிறமூட்டிகளுக்காக நாங்கள் ஐஐடி கான்பூரில் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அவர்களின் வழிகாட்டுதலும் எங்களுக்கு மிக உபயோகமகாக இருக்கும. தமிழ்நாடு முழுதும் எல்லா பேக்கரிகளிலும் எங்கள் நிறமூட்டிகளை விற்பனை செய்யவேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதோடு 5 மாநிலங்களில் எங்கள் தாவர நிறமூட்டிகளை விற்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.
கிரேவியை பொருத்தவரை இரண்டாம் நிலை, மூன்றாம் நகரங்களில் உள்ள உணவங்களில் எங்கள் கிரேவிகளை விற்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.”