Summer & Nannari Sarbath: இதுதான் ஒரிஜினல் நன்னாரி சர்பத்..!
கோடையின் வெயில் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர் ஆகியவற்றின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது ‘நன்னாரி சர்பத்.’ கிராமப்புறங்களில் கோடைக் காலங்களில் தவிர்க்கமுடியாத பானம் இது. இனிப்பும் சிறுகசப்பும் கலந்த நன்னாரி சர்பத்தை ஒவ்வொரு மடக்காக பொறுமையாக குடித்து விட்டு டம்ளரை கீழே வைக்கும் போதுதான் தெரியும் அதன் சுவையும் இதமும். நன்னாரி வேர்கலந்த மணப்பாகு ஊற்றி சர்பத் குடித்த காலம் மாறி தற்போது சர்பத் தயாரிப்பில் எசன்ஸ் என்ற பெயரில் எதையோ கலக்கிறார்கள். இதனால் நன்னாரி வேரின் பயன் மறைக்கப்பட்டு வெறும் இனிப்புக் குளிர்பானமாக மாறிவிட்டது. இந்த சர்பத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணங்களில் கலக்கப்படும் எசன்ஸ் ஒரிஜினல்தானா..? சுத்தமான நன்னாரியின் நிறம் எப்படி இருக்கும்? மணப்பாகை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார். திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்தமருத்துவர் மைக்கேல் செயராசு.

‘’நல்ல நாற்றம், அதாவது நல்ல மணம் தருவதால்தான் இதை ‘நன்னாரி’ன்னு சொல்றோம். நறுநீண்டி, நறுக்குமூலம், நறுநெட்டி, பாற்கொடி, கிருஷ்ணவல்லி, பாதமூளி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது உடல் வெம்மையைக் குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பசியையும் தூண்டும் ஒருவகைத் தாவரம். நன்னாரியின் வேரை தண்ணீரில் ஊறவைத்துக் குடித்து உடல் உஷ்ணத்தை குறைத்து வந்தனர் முன்னோர்கள். நாளடைவில் வேர் ஊறிய நீருடன் சுவை கூட்ட வெல்லப்பாகு கலந்து குடித்து வந்ததால் இது ‘நன்னாரி சர்பத்’ என்றானது. ஆனால், தற்போதைய கோடைகாலத்தில் தெருவுக்குத் தெரு முளைத்துள்ள சர்பத் கடைகளில் எசன்ஸ் என்ற பெயரில் கலக்கப்படுவது ஒரிஜினல் நன்னாரி மணப்பாகு இல்லை. ஒரு லிட்டர் மணப்பாகு தயார் செய்ய, ஒருகிலோ நன்னாரி வேரை ஒன்றிரண்டாக (பவுடராக இடிக்காமல்) உரல் அல்லது மிக்ஸியில் இடித்து, அதை 6 லிட்டர் வெந்நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். வெந்நீரின் சூடு மிதமாக இருந்தால் போதும்.
மறுநாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒன்றரை லிட்டராக வற்ற வைத்து இறக்கி வடிகட்டி, அதனுடன் ஒரு கிலோ சீனிக்கற்கண்டை தூளாக்கிப் போட்டு மீண்டும் அடுப்பில் வைத்து பாகு அல்லது தேன் பதம் வந்தவுடன் இறக்கி உடனே வேறொரு பாத்திரத்தில் ஊற்றிவிட வேண்டும். சூடு ஆறியதும் இதைக் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். இதுதான் நன்னாரி மணப்பாகு தயாரிப்பு முறை. வெந்நீரில் வேரை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டியதிருப்பதால் இந்த தயாரிப்பை மாலையில் செய்ய ஆரம்பிக்கலாம். நன்னாரி வேர் எல்லா நாட்டுமருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இந்த மணப்பாகு இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதுதான் நன்னாரியின் ஒரிஜினல் நிறம்.

ஆனால், கடைகளில் பாட்டில்களில் விற்கப்படும் நன்னாரி சிரப் அல்லது எசன்ஸில் இனிப்பிற்காக சாக்கிரீமும், மஞ்சள், சிவப்பு, அடர்சிவப்பு, ஆரஞ்சு என பல வண்ணங்களில் எசன்ஸை மாற்ற பலவகை சாயப்பொடிகளும் இதோடு சில வேதியல் பொருட்களும் கலக்கப்படுகின்றன. இது உடலுக்கு நல்லதல்ல. இப்படி வீட்டிலேயே நன்னாரி மணப்பாகு தயாரித்து ஒரு டம்ளரில் இரண்டு ஸ்பூன் அளவு நன்னாரி மணப்பாகு ஊற்றி, அதில் அரைத்துண்டு எலுமிச்சை பழம் பிழிந்து பற்றாக்குறைக்கு மண்பானை தண்ணீர் ஊற்றி ஸ்பூனால் கலக்கி குடிக்கலாம். வெறும் தண்ணீர் ஊற்றி ஐஸ்கட்டி போட்டு குடித்தால் தொண்டையில் தொற்று வர வாய்ப்பிருப்பதால் மண்பானை தண்ணீர் ஏற்றது. இதுதவிர, 10 லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையில் தண்ணீருக்குள் 10 கிராம் நன்னாரி வேர், 10 கிராம் வெட்டி வேர் இரண்டையும் ஒரே துணியில் கட்டிப்போட்டு தாகத்திற்கு அந்தத் தண்ணீரையும் குடித்து வரலாம். ஆனால், தினமும் தண்ணீரையும் வேரையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதுதவிர ஒருலிட்டர் தண்ணீரில் 50 கிராம் புளியைக் கரைத்து, அதில் 500 கிராம் பனைவெல்லத்தை போட்டு இதனுடன் எலுமிச்சை அரை பழம் கலந்தும் குடிக்கலாம். தேவைப்பட்டால் கூடுதல் சுவைக்காக இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு நன்னாரி மணப்பாகையும் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் கூட சர்பத் குடித்து வரலாம்’’ என்றார்.
சித்த மருத்துவர் சொன்னது போல வீட்டிலேயே நன்னாரி மணப்பாகை தயாரித்து வைத்துக்கொண்டு தினமும் நன்னாரி சர்பத் குடித்து கோடையின் வெப்பத்தைக் குறைப்போம்.