Tanushka Singh: `பயத்தை உணரவில்லை' - இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி தனுஷ்கா சிங்
பறக்கும் படை அதிகாரியாக (Flying Officer) பணியாற்றி வந்த தனுஷ்கா சிங், இந்திய போர் விமானப்படையில் ஜாகுவார் போர் விமானத்தின் முதல் நிரந்தர பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை போர் விமானப்படையில் பெண்கள் விமானியாக நியமிக்கப்படாத நிலையில், இச்சாதனையை மங்களூரைச் சேர்ந்த தனுஷ்கா சிங் செய்துள்ளார்.
தனுஷ்கா ஒரு பெருமையான ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தந்தை லெப்டினன்ட் கர்னல் அஜய் பிரதாப் சிங், ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர். அவரது தாத்தா ஆயுதப்படையில் பணியாற்றியவர். உத்தரபிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தனுஷ்கா, 2007-ம் ஆண்டு முதல் மங்களூருவில் வசித்து வருகிறார். தவிர, மங்களூரை தனது வீடு என மகிழ்வுடன் குறிப்பிடுகிறார்.

படிப்பில் அர்ப்பணிப்போடு சிறந்து விளங்கிய தனுஷ்கா, சூரத்கல்(Suratkal)லில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின், மங்களூரில் தன் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் அறிவியல் ஆர்வத்தை அதிகம் வளர்த்துக்கொண்ட தனுஷ்கா, தன் நாட்டிற்கு சேவை செய்ய விரும்பி மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இணைந்தார். 2022-ல் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் பி.டெக். டிகிரி பெற்றார்.
சிறு வயதிலிருந்தே ஆயுதப்படையில் சேர விரும்பினார் தனுஷ்கா. ஆரம்பத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவர், விமானப்படையிலுள்ள பெண்களுக்கான வாய்ப்புகளால் ஊக்குவிக்கப்பட்டார். பின், விமானப்படையின் விமானியாகும் லட்சியத்தை மனதில் வளர்த்துக்கொண்டார். செயல்முறை தேர்வில் வென்ற தனுஷ்கா, தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள விமானப்படை அகாடமியில் தனது தீவிர பயிற்சியைத் தொடங்கினார்.18 மாத கடும் பயிற்சியில் ராணுவ விமானப் போக்குவரத்து சார்ந்த தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். ஓராண்டு கால கூடுதல் சிறப்புப் பயிற்சிக்கு பின், ஹாக் எம்கே 132 ( Hawk MK 132) விமானத்தை இயக்க தேர்ச்சியானார். விரைவில் ஜாகுவார் அணியில் தனுஷ்கா நிரந்தரமாக சேரவுள்ளார். பிற பெண் விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தை அனுபவத்துக்காக ஓட்டியிருந்தாலும், அந்த விமானத்தை இயக்க நிரந்தரமாக நியமிக்கப்பட்ட முதல் பெண் தனுஷ்காதான்.
பயமே உணரவில்லை. இதுதான் நான் எப்போதும் விரும்பிய வாழ்க்கை என்பதை அந்த தருணத்தில்தான் உணர்ந்தேன்.
தனது முதல் விமானப் பயிற்சி அனுபவத்தை நினைவு கூர்ந்த தனுஷ்கா, "பயணத்தில் பெருமகிழ்ச்சி கொண்டேன். பயத்தை உணரவில்லை. இதுதான் நான் எப்போதும் விரும்பிய வாழ்க்கை என்பதை அந்த தருணத்தில்தான் உணர்ந்தேன். ஆயுதப்படைகளில் இணைய விரும்புவோர்க்கு தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் தலைமைத்துவ திறன்கள் முக்கியம் என வலியுறுத்திய தனுஷ்கா, இக்குணங்களைக் கொண்ட எவரும் தைரியமாக தனது கனவுகளை நனவாக்கத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்’’ என்கிறார்.
பெண்கள் முன்னேற்றத்துக்கான மைல்கல்லைத் தொட்டு சாதனை படைத்துள்ள தனுஷ்காவுக்கு வாழ்த்துகள்!