The Secret of Shiledars Review: புதையலைத் தேடும் ஷிலேதார்கள்; மிஸ்டரி ரகசியங்களைச் சொல்லி வெல்கிறதா?
வரலாறு குறித்துத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் ஷிலேதார்களுள் ஒருவரான டாக்டர் ரவி பட் (ராஜீவ் கந்தேல்வால்). பலரும் வாழையடி வாழை ஷிலேதாராக இருந்து சத்ரபதி சிவாஜியின் புதையலைப் பாதுகாத்து வருகிறார்கள். (சத்ரபதி சிவாஜியின் புதையலை பாதுகாப்பவர்களின் பெயர்தான் ஷிலேதார்கள். ஷிலேதார்கள் பரம்பரை பரம்பரையாக அதை பாதுகாப்பதே அவர்களின் வாழ்நாள் கடமையாக கருதுபவர்கள்) அந்த ஷிலேதார்களில் ஒருவர் நீதிபதி தீக்ஷித் . நீதிபதி தீக்ஷித் (திலீப் பிரபவால்கர்) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/ihltrksk/VS_YouTube_HotstarSpecialsTheSecretOfTheShiledarsOfficialTrailerRajeevKhandelwalSaiTamhankar_0_31_.jpg)
இவருக்கு அடுத்தப்படியாக, ஷிலேதார் ரவியிடம் உண்மைகளை விளக்கி சத்ரபதி சிவாஜியின் புதையல் இருக்கும் இடம் குறித்தான துப்புகளைக் கொடுக்கிறார் தீக்ஷித். மற்றொரு பக்கம் அந்தப் புதையலை எடுத்தாக வேண்டும் என்கிற நோக்கில் இன்னொரு குழுவினரும் துடிப்புடன் இருக்கிறார்கள். அத்துடன் இந்தப் புதையலுக்காக பல கொலைகளைச் செய்வதற்கும் துணிகிறது இந்த எதிர் குழு. இந்தக் குழுவினரால் நீதிபதி தீக்ஷித் கொல்லப்பட்டதற்குப் பிறகு அவர் கொடுத்த துப்புகளை வைத்து ரவி எப்படி அந்தப் புதையலை கண்டடைந்து பாதுகாக்கிறார் என்பதை மிஸ்டரி கலந்த த்ரில்லராக பல ரகசியங்களைச் எடுத்துச் சொல்கிறது இந்த இந்தி வெப் சீரிஸ்.
`பிரதிபாசந்திரா' என்கிற மராத்திய நாவலின் தழுவலாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
புதையலைப் பாதுகாக்க வேண்டுமென்கிற முனைப்பு, எதிரணியை எதிர்த்து நிற்கும் துணிவு என ரவி கதாபாத்திரத்தை நீட்டாக டீல் செய்திருக்கிறார் நடிகர் ராஜீவ் கந்தேல்வால். வழக்கமான டெம்ப்ளேட் கதாபாத்திரமென்றாலும் தனது நடிப்பால் கூடுதலாகப் புதுமையை புகுத்த மெனகெட்டிருக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. கதையின் முக்கிய திருப்பங்களுக்கு இவரின் எக்ஸ்பிரஷன்ஸும் பலம் சேர்த்திருக்கின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/wv00tb5n/VS__YouTube_HotstarSpecialsTheSecretOfTheShiledarsOfficialTrailerRajeevKhandelwalSaiTamhankar_0_11_.jpg)
தில்லாலங்கடி வேலைகளை பார்க்கும் நேரத்தில் வெளிப்படும் திருட்டுதனம், தவறை உணரும் சமயத்தில் வெளிப்படும் சோகமென அனைத்துக்கும் ஒரே வடிவிலான முகப்பாவணைகளே நாயகி சாய் தம்ஹன்ஹர் முகத்தில் வெளிப்பட்டிருப்பது ஏமாற்றம். `தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என சீரிஸ் முழுக்க ராஜீவ் கந்தேல்வாலுக்கு துணையாக வரும் கெளரவ் அம்லானி தன்னுடைய சாமர்த்தியத்தால் தனியாக மிளிர்கிறார். வில்லன் கண்ணன் அருணாச்சலமும் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்து `அச்சா' சொல்ல வைக்கிறார்.
ராய்கட் மலைகள், அரசர் கால சுரங்கப்பாதை எனப் பார்த்திடாத பல விஷயங்களையும் தனது கேமரா மூலம் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகேஷ் விஸ்வநாத். இவரின் ஒளிப்பதிவுக்கு கலை இயக்குநரின் செம்மையான வேலைகளும் தீனிபோடுகிறது. புதையலைத் தேடிச் செல்லும் வேளையில் ரிப்பீட் அடிக்கும் காட்சிகளைக் கத்தரித்து தனது `கட்'களால் படத்தொகுப்பாளர் இன்னும் அழகாகக் கோத்திருக்கலாம். புதையலைத் தேடும் சமயத்திலும், எதிரணி பார்வையிலிருந்து தப்பிச் செல்லும் காட்சியிலும் களத்திற்கேற்ப த்ரில் உணர்வைக்கூட்டுகிறது ட்ராய் - அரிஃப் கூட்டணியின் பின்னணி இசை.
வரலாற்றை மிகத் தீவிரமாக ஆராய்ந்து திகட்டதால் வகையில் திரைக்கதையாக கோர்த்து த்ரில் கொடுக்கிறார் திரைக்கதையாசிரியர் துஷார் அஜ்கோவன்கர். ஒரு வரலாற்று கதையை செம்மையான ரகத்தில் தெளிவாக சொல்லியதற்காக இவருக்கு பாராட்டுகளைக் கொடுக்கலாம். த்ரில் அனுபவத்தைக் கூட்டுவதற்காக கதை சொல்லும் பார்மெட்டில் மெனகெட்டிருக்கிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/utlzaaf5/VS_YouTube_HotstarSpecialsTheSecretOfTheShiledarsOfficialTrailerRajeevKhandelwalSaiTamhankar_0_46_.jpg)
ஆனால், அதில் ஒளிந்திருக்கும் எளிதில் யூகிக்கும்படியான திருப்பங்கள் போன்ற விஷயங்களால் சில எபிசோடுகளுக்கு மேல் டல் அடிக்கிறது. துப்புகளை வைத்து புதையலைக் கண்டுபிடிக்கும் காட்சிகளை சுவரஸ்யமாகவும் புதுமையாகவும் கொடுக்கவேண்டும் எனத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் முடிவில் அது கார்டூன் கேம் டெம்ப்ளேட்டில் எஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் லெவலிலான காட்சிகள் இல்லாததும், தலைதூக்கும் லாஜிக் மீறல்களும் இந்த சீரிஸின் அடுத்த சில மைனஸ்கள்.
சுவாரஸ்யங்களைக் கூட்ட தவறியிருந்தாலும் மிஸ்டரி த்ரில்லர் விரும்பிகளுக்கு இந்த சீரிஸ் குட் என்டர்டெயினராக பல ரகசியங்களைச் சொல்லிக் கொடுக்கும்!
VIKATAN PLAY
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-18/brjbsb5l/WhatsApp-Image-2024-11-18-at-16.55.15.jpeg)