Trump Vs Musk: கசந்த நட்பு; காட்டமான ட்ரம்ப்; ஜே.டி வான்ஸை அதிபராக சொல்லும் எலான்? - காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் - டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் இடையே இருந்த நட்பு உலகறிந்தது. எந்த அளவு இருவருக்கும் நெருக்கம் இருந்தது என்றால் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும் 'செயல்திறன் மேம்பாட்டு துறை (டிஓஜிஇ)' என்று ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப் (தற்போது மஸ்க் அந்தப் பதவியில் இல்லை). மற்ற நாட்டு தலைவர்களுடன் உரையாடும்போதுகூட மஸ்க் உடன் இருக்க வேண்டும் என விரும்பினார். இவர்களின் உறவால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த உறவில் இப்போது சிக்கல் எழுந்திருக்கிறது.
என்ன சிக்கல்:
அதிபர் ட்ரம்ப் தலைமைலான அரசு 'புதிய வரி குறைப்பு மசோதா' ஒன்றை செனட் அவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு எலான் மஸ்க் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ``இந்த மசோதா நாட்டின் செலவை அதிகரிக்கும். இந்த மசோதா முட்டாள்தனனமாது. செலவுகளை கட்டுப்படுத்ததான் 'செயல்திறன் மேம்பாட்டு துறை உருவாக்கப்பட்டது. ஆனால், என்னை செலவுகளை கட்டுப்படுத்த கூறிவிட்டு, ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஆலோசனையின் அடிப்படையில் வரிக்குறைப்பு மசோதாவை தாக்கல் செய்வது சரியல்ல" என விமர்சித்தார்.
ட்ரம்ப் - மஸ்க் மோதல்:
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், ``இந்த மசோதா குறித்து முழுமையாக அறிந்தவர் மஸ்க்தான். அவரே இப்படி கூறுவது ஏமாற்றமளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. இனி அது தொடருமா எனத் தெரியவில்லை" என தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து எலான் மஸ்க், ``இந்த மசோதா எனக்கு ஒருமுறை கூட காட்டப்படவில்லை. நான் மட்டும் இல்லையென்றால் ட்ரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். இவ்வளவு நன்றி மறந்திருக்கக் கூடாது" என்று காட்டமாகப் பேசினார்.
மிரட்டிய ட்ரம்ப்; எதிர்வினையாற்றிய மஸ்க்:
இதற்கிடையில், இருவரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். ஒருகட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப், ``நமது பட்ஜெட்டில், பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, எலானின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும். அதனால் நாட்டின் பாதி செலவு குறைந்துவிடும்" என மிரட்டும் தொனியில் குறிப்பிட்டிருந்தார். அதனால் இருவருக்குமான உறவில் விரிசல் விகாரமானது.
அதே நேரம் பங்கு சந்தையில் எலான் மஸ்கின் டெஸ்லா 14.3% பங்குகளை இழந்து, சுமார் 150 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு நஷ்டமானது. இது டெஸ்லாவின் வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய மதிப்பு சரிவாகும்.
இந்த நிலையில்தான் எலான் மஸ்க்கிடமிருந்து காட்டமான எதிர்ப்பு வந்திருக்கிறது. எலான் மஸ்க், ``ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவருக்குப் பதிலாக ஜே.டி. வான்ஸ் புதிய அதிபராக நியமிக்கப்பட வேண்டும்" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.